சேலத்தில் 3 வீடுகளில் நகை, பணம் திருட்டு

சேலத்தில் 3 வீடுகளில் நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-02-09 21:56 GMT
சேலம்:
சேலத்தில் 3 வீடுகளில் நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நகை, பணம் திருட்டு
சேலம் அன்னதானப்பட்டி அவ்வையார் நகரை சேர்ந்தவர் அர்த்தனாரி. இவர் சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் பட்டன் கடை நடத்தி வருகிறார். அர்த்தனாரி நேற்று முன்தினம் இரவு வீட்டின் மாடியில் தூங்கினார். அவர் காலையில் எழுந்து வீட்டுக்குள் சென்று பார்த்த போது அங்கு உண்டியலில் இருந்த ரூ.30 ஆயிரம் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 
இதனிடையே சேலம் அன்னதானப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பழனியப்பன் என்பவர் நேற்று முன்தினம் வீட்டின் கதவை பூட்டாமல் தூங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த 2½ பவுன் நகை மற்றும் ரூ.11 ஆயிரம் ஆகியவற்றை திருடிச்சென்று விட்டனர்.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
இதேபோல் அதே தெருவில் உள்ள நடேசன் என்பவருடைய வீட்டிலும் ரூ.3 ஆயிரம் திருட்டு போனது. இந்த திருட்டுகள் தொடர்பாக அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் 3 பேரும் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த திருட்டுகள் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்