மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் 142 பேர் கைது
மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் 142 பேர் கைது
திருப்பூர்:
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நேற்று காலை 8-வது நாளாக நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராணி தலைமை தாங்கினார். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அகவிலைப்படி, சரண்டர் உள்ளிட்ட பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் வழங்க வேண்டும். தொகுப்பூதியத்தில் பணிபுரியும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்டவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.
மாநில செயலாளர் பரமேஸ்வரி மறியல் போராட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் கோரிக்கைகள் குறித்து பேசினார். மாவட்ட இணை செயலாளர் திலிப் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
போராட்டத்தில் பங்கேற்றவர்களில் 5 பேர் சங்கு ஊதியும், சேகண்டி அடித்தும் கோஷங்கள் எழுப்பினர். கோரிக்கைகள் அரசுக்கு கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சங்கு ஊதினார்கள். சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டார்கள்.
இதைத்தொடர்ந்து தெற்கு போலீஸ் உதவி கமிஷனர் நவீன்குமார் தலைமையிலான தெற்கு போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து வேனில் ஏற்றி குப்பாண்டம்பாளையத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். 98 பெண்கள் உள்பட 142 பேரை போலீசார் கைது செய்தனர்.