சேலத்தில் வேன் கவிழ்ந்து விபத்து: முதியவர் உள்பட 2 பேர் சாவு

சேலத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், முதியவர் உள்பட 2 பேர் பலியானார்கள். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2021-02-09 21:39 GMT
சேலம்:
சேலத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், முதியவர் உள்பட 2 பேர் பலியானார்கள். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
வெங்காய லோடு வேன்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பாரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 45). அதே பகுதியை  சேர்ந்தவர் பாலு (50). ராசிபுரம் கரட்டு தோட்டம் பகுதியை சேர்ந்தவர்கள் பெரியசாமி (65), அன்பழகன் (47) மற்றும் அடையாளம் தெரியாத ஒருவர் என 5 பேர் ஒரு வேனில் வெங்காயம் லோடு ஏற்றிக்கொண்டு சென்னையில் இருந்து சேலம் நோக்கி வந்தனர்.
நேற்று இரவு வேன் சேலம் அம்மாபேட்டையில் ஒரு தனியார் பள்ளி அருகே வந்தது. அப்போது அம்மாபேட்டை ரஷ்யாகாலனி பகுதியை சேர்ந்த பழனிசாமி (62) என்பவர் மொபட்டில் சாலையை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதில் கண் இமைக்கும் நேரத்தில் வேனும், மொபட்டும் மோதிக்கொண்டன.
பரிதாப சாவு
மொபட் மீது மோதிய வேகத்தில் வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற சாலையில் கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்த 5 பேர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர். மேலும் வேன் மோதியதில் மொபட்டுடன் தூக்கி வீசப்பட்ட பழனிசாமியும் பலத்த காயம் அடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம்பட்டவர்களை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி பழனிசாமி, வேனில் வந்த முருகேசன் ஆகிய 2 பேர் பரிதாபமாக இறந்தனர். 
காயம் அடைந்த பாலு, பெரியசாமி, அன்பழகன் மற்றும் அடையாளம் தெரியாத ஒருவர் என மொத்தம் 4 பேருக்கு டாக்டர்கள்  தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்