கோவையில் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்து போராட்டம்
கோவையில் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்தினர்.
கோவை,
காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் கருப்புசட்டை அணிந்து நேற்று தாமஸ் கிளப் வளாகத்தில் குவிந்தனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் அவர்கள், சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். அவர்கள் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பாதுகாப்பிற்கு நின்ற போலீசார் அரசு ஊழியர்கள் 183 பேரை கைது செய்தனர்.
இது குறித்து அரசு ஊழியர்கள் கூறுகையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த 8 நாட்களாக அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இல்லை என்றால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றனர்.