பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை,
அன்னவாசலில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பழனியப்பன் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் தமிழ்செல்வன் முன்னிலை வகித்தார். போராட்டத்தினை மாவட்ட தலைவர் தர்மராஜன் தொடங்கி வைத்தார். இதில் சமூகத்தில் அடித்தட்டில் வாழும் விவசாய தொழிலாளர்களுக்கு பட்டியல் இன மற்றும் பழங்குடி இன மக்களுக்கு மத்திய, மாநில அரசுகளால் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ள வீடுகள் பழுதடைந்துவிட்டன. அவ்வீட்டில் வாழ முடியாத சூழ்நிலை உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு 15 ஆண்டுகளுக்கு முன்னதாக கட்டப்பட்டுள்ள பழைய வீடுகளை இடித்துவிட்டு 400 சதுர அடி அளவில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் பட்டியல் இன மக்களுக்கும், மலைவாழ் மக்களுக்கும் புதிய இலவச வீடுகளை மத்திய, மாநில அரசுகள் கட்டிக் கொடுக்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு தினசரி ஊதியமாக ரூ.600 வழங்க வேண்டும்.
மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை
100 நாள் வேலை என்பதை 200 நாட்களாக உயர்த்தி நடப்பில் உள்ள ஊதியத்தை வாரா வாரம் முழுமையாக பாக்கி இல்லாமல் வழங்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் நகர பகுதிகளுக்கும் விரிவுப்படுத்தி செயல்படுத்த வேண்டும்.
இத்திட்டத்தை செயலாக்கம் பற்றி கண்காணிக்க வட்டார அளவில் விவசாயத் தொழிலாளர்களை கொண்ட கண்காணிப்புக்குழு அமைக்க வேண்டும். 60 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டது.
ஆவுடையார்கோவில், புதுக்கோட்டை
ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ஜான் தலைமையில் நடந்தது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் கணேசன் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார்.
தமிழக விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் புதுக்கோட்டை அண்ணாசிலை அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் விவசாய தொழிலாளர் சங்க தேசிய குழு உறுப்பினர் ராசு தலைமை தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சியின் புதுக்கோட்டை ஒன்றிய செயலாளர் கைலாச பாண்டியன் சிற்பி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பொன்னமராவதி
பொன்னமராவதி பஸ் நிலையம் முன்பு தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஒன்றிய அமைப்பாளர் பிரதாப் சிங் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கீரமங்கலம்
கீரமங்கலத்தில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் மணி தலைமையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் சொர்ணகுமார், நகர செயலாளர் தமிழ்மாறன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.