நெல்லையில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அருணாச்சலம் தலைமை தாங்கினார். அலுவலர் சங்க நிர்வாகிகள் சந்திரஹாசன் பிரேமா, குமார், சிங்காரம் மாதவ சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் சங்கரசுப்பு வரவேற்று பேசினார்.
வருவாய் துறையை சிறப்பு துறையாக அறிவிக்க வேண்டும், தலைமை செயலக நிதித்துறைக்கு சமமாக உயர் ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும், வருவாய் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணைத்தலைவர் ஆவுடையப்பன், மாநில செயலாளர் வேல்முருகன், தென்மண்டல அமைப்பு செயலாளர் செல்வகுமார், மாவட்ட செயலாளர் காஜா கரிபுன்நவாஸ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.