2 மாதங்களில் 100 பவுன் நகைகள் மீட்பு

குமரி மாவட்டத்தில் 2 மாதங்களில் நடந்த 44 திருட்டு-வழிப்பறி வழக்குகளில் 100 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கூறினார்.;

Update: 2021-02-09 19:25 GMT
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் 2 மாதங்களில் நடந்த 44 திருட்டு-வழிப்பறி  வழக்குகளில் 100 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கூறினார்.
ரூ.10 லட்சம் செல்போன்கள்
குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் செல்போன்களை தவறவிட்டதாக கூறி போலீஸ் நிலையங்களில் புகார்கள் செய்தனர். அதைத் தொடர்ந்து அந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவிட்டார்.
அதன்படி சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர்கள் முகமது சம்சீர், செண்பக பிரியா ஆகியோர் தலைமையிலான போலீசார் தவறவிட்ட சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 112 செல்போன்களை கண்டுபிடித்தனர். அவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடந்தது.
பாராட்டு
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார். மேலும் இந்த செல்போன்களை துரிதமாக செயல்பட்டு, கண்டுபிடித்த சைபர் கிரைம் போலீசாரை வெகுவாக பாராட்டினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் (தற்போது) வரை, பொதுமக்கள் தவறவிட்ட 375 செல்போன்களை சைபர் கிரைம் போலீசார் கண்டு பிடித்து, அவை உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக இன்று (நேற்று) 112 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளோம்.
100 பவுன் நகைகள் மீட்பு
கடந்த ஆண்டில் குமரி மாவட்டத்தில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு இருந்த வெளிமாவட்ட மோட்டார் சைக்கிள்கள், வாகன சோதனையின்போது பிடிபட்ட வெளி மாவட்ட மோட்டார் சைக்கிள்கள், குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் பிடிபட்ட வெளிமாவட்ட மோட்டார் சைக்கிள்கள் என மொத்தம் 29 மோட்டார் சைக்கிள்கள் கண்டுபிடித்து அந்தந்த மாவட்ட போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 மாதத்தில் திருட்டு மற்றும் வழிப்பறி ஆகிய சம்பவங்கள் மூலம் பறிபோன சுமார் 100 பவுன் நகைகள் மீட்கப்பட்டு உள்ளது. அதாவது கடந்த டிசம்பர் மாதம் வினோத் என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து 30 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. இதன் மூலம் 23 திருட்டு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
வழக்குகளுக்கு தீர்வு
அதேபோல ஜனவரி மாதம் எட்வின்ஜோஸ் என்பவர் கைது செய்யப்பட்டு 57½ பவுன் நகைகள் மீட்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 18 திருட்டு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
நேற்று (அதாவது நேற்று முன்தினம்) வழிப்பறி வழக்கில் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 12 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 3 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மொத்தத்தில் 100 பவுன் நகைகள் மீட்கப்பட்டு, 44 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கூறினார்.

மேலும் செய்திகள்