வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மீனவர்கள்

பாம்பன் பகுதியில் 5 நாட்களாக மீன்பிடிக்க செல்ல விதிக்கப்பட்ட தடையால் மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Update: 2021-02-09 19:17 GMT
ராமேசுவரம்,

பாம்பன் பகுதியில் 5 நாட்களாக மீன்பிடிக்க செல்ல விதிக்கப்பட்ட தடையால் மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மீன் பிடிக்க தடை

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசும் என்ற வானிலை ஆய்வு மைய அறிவிப்பால் கடந்த 4 நாட்களாகவே பாம்பனில் உள்ள விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்துறை அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் 5-வது நாளாக நேற்றும் பாம்பன் விசைப்படகு மீனவர்கள் தென் கடலான மன்னார்வளைகுடா கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக சுமார் 80-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் ஏராளமான நாட்டுப் படகுகளும் மீன்பிடிக்க செல்லாமல் தெற்கு துறைமுக கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

மீனவர்கள் தவிப்பு

இதுகுறித்து பாம்பன் விசைப்படகு மீனவர் பேட்ரிக் கூறும்போது, இது ஆண்டுதோறும் வழக்கமாக இந்த சீசனில் வீசக் கூடிய காற்றுதான். வழக்கம் போல அதே வேகத்தில் தான் காற்று வீசி வருகின்றது. வானிலை ஆய்வு மைய அறிவிப்பை சுட்டிக்காட்டி கடந்த 5 நாட்களாக பாம்பனில் உள்ள விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன் துறை அதிகாரிகளால் விதிக்கப்பட்டுள்ள தடையால் மீன்பிடி தொழிலையே நம்பி வாழும் சுமார் 500-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வருமானமின்றி வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.
ஆகவே இனிவரும் நாட்களிலாவது இதுபோன்று மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்காமல் வழக்கம்போல் மீன் பிடிக்க அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்