முத்தூரில் நூல் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சு, எந்திரங்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன.
முத்தூரில் நூல் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சு எந்திரங்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன
முத்தூர்:-
முத்தூரில் நூல் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சு, எந்திரங்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன.
நூல் மில்லில் தீ விபத்து
திருப்பூர் மாவட்டம் முத்தூர்- காங்கேயம் சாலையில் ஸ்ரீ குப்பண்ணா ஸ்பின்னிங் மில் என்ற நூல் மில் செயல்பட்டு வருகிறது. இந்த நூல் மில்லின் உரிமையாளராக எஸ்.ஆர்.செந்தில்குமார் என்பவர் உள்ளார். இந்த நிலையில் நேற்று காலை இந்த நூல் மில் வழக்கம்போல் இயங்கி கொண்டிருந்தது. அப்போது காலை 11.15 மணிக்கு அங்குள்ள ஒரு கட்டிடத்தில் மின் கசிவு காரணமாக நூல் மில் எந்திரத்தின் ஒரு பகுதியில் எதிர்பாராதவிதமாக தீப்பிடித்தது.
இந்த தீ மளமளவென்று வேகமாக பரவி எந்திரம் முழுவதும் மற்றும் அருகில் கொட்டி வைக்கப்பட்டிருந்த பஞ்சுகளிலும் பரவி கொழுந்து விட்டு எரியத்தொடங்கியது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த நூல் மில் நிர்வாகத்தினர் மற்றும் பணியாளர்கள் ஒன்று சேர்ந்து உடனடியாக அப்பகுதிக்கு நேரில் வந்து தீயணைப்பு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் முற்றிலும் தீயை அணைக்க முடியவில்லை.
எந்திரங்கள் எரிந்து சேதம்
உடனடியாக இதுபற்றி தகவல் அறிந்த வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் சி.தனசேகரன், வேலுச்சாமி (போக்குவரத்து) ஆகியோர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் 2 மணி நேரம் போராடி மேலும் பரவாமல் தீயை முற்றிலும் அணைத்தனர்.
ஆனாலும் இந்த தீ விபத்தில் தீப்பிடித்த கட்டிடத்தின் மேற்கூரை, எந்திர உதிரி பாகங்கள் மற்றும் பஞ்சுகள் தீயில் முற்றிலும் எரிந்து நாசம் ஆகின. இவற்றின் மதிப்பு பல லட்சம் ரூபாய் ஆகும். மேலும் இந்த தீ விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.