உடுமலைமடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் கனிமொழி எம்பி இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்
உடுமலைமடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் கனிமொழி எம்பி இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்
தளி:-
உடுமலை,மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் கனிமொழி எம்.பி. இன்று (புதன்கிழமை) தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
கனிமொழி பிரசாரம்
விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. திருப்பூர் தி.மு.க. தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மடத்துக்குளம் மற்றும் உடுமலை சட்டமன்ற தொகுதியில் இன்று (புதன்கிழமை) சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
அதன்படி இன்று காலை 9.30 மணிக்கு சங்கராம நல்லூரில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பிரசாரத்தை தொடங்குகிறார். காலை 10 மணிக்கு குமரலிங்கம் பஸ் நிறுத்தத்தில் திறந்த வேனில் பிரசாரம் மேற்கொள்கிறார். 10.45 மணிக்கு மலையாண்டிபட்டினம் பகுதியில் நெசவாளர்களுடன் கலந்துரையாடுகிறார்.
கலந்துரையாடல்
அதைத் தொடர்ந்து பகல் 12 மணிக்கு பள்ளபாளையம் பகுதியில் கொடியேற்றி வைத்து மாற்று கட்சியினர் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பின்னர் 12.30 மணிக்கு ஜல்லிபட்டி பகுதியில் தென்னை ஓலை தடுக்கு பின்னும் தொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார்.
அதை தொடர்ந்து மதியம் 1 மணிக்கு திருமூர்த்தி மலையில் மலைவாழ் மக்களை சந்திப்பிலும், 1.30 மணிக்கு காண்டூர் கால்வாய் பகுதியில் பரம்பிக்குளம்- ஆழியாறு பாசனத்திட்ட விவசாயிகளுடன் கலந்துரையாடுகிறார்.
மகளிர் கிராமசபை
அதைத்தொடர்ந்து மதியம் 3 மணிக்கு எரிசனம்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் மக்கள் சந்திப்பிலும் மாலை 3.30 மணிக்கு தேவனூர்புதூரில் திறந்த வேனில் பிரசாரம் மேற்கொள்கிறார். பின்னர் மாலை 4.30 மணிக்கு பொள்ளாச்சி தாலுகா திப்பம்பட்டி பஸ்நிலையத்தில் தி.மு.க.கொடியை ஏற்றி வைத்து பிரசாரம் மேற்கொள்கிறார்.அதைத்தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு குடிமங்கலம் ஒன்றியம் புதுப்பாளையம் கிராமத்தில் மகளிர் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
கலைஞரின் நண்பருடன் சந்திப்பு
இரவு 7 மணிக்கு உடுமலை ஜெயலானி காலனியில் கலைஞரின் நண்பரைச் சந்தித்து நலம் விசாரிக்கிறார். அதைத்தொடர்ந்து 7.15 மணிக்கு உடுமலை போக்குவரத்து கிளை முன்பாக தொழிலாளர்களிடம் குறைகளை கேட்கிறார்.
பின்னர் இரவு 7.30 மணிக்கு உடுமலை மத்திய பஸ் நிலையம் அருகில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் இரா.ஜெயராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ மற்றும் தி.மு.க.வினர் செய்து வருகின்றனர்.