பெண்ணை எரித்து கொலை செய்த வழக்கில் வாலிபா் கைது

சங்கராபுரம் அருகே பெண்ணை எரித்து கொலை செய்த வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து அவர் போலீசாரிடம் கொடு்த்த வாக்குமூலம் தெரியவந்துள்ளது.

Update: 2021-02-09 17:43 GMT
சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே பெண்ணை எரித்து கொலை செய்த வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து அவர் போலீசாரிடம் கொடு்த்த வாக்குமூலம் தெரியவந்துள்ளது.

எரிந்த நிலையில் பெண்பிணம்

சங்கராபுரம் மயிலாம்பாறை காட்டுபிள்ளையார் கோவில் அருகே முள்தோப்பில் கடந்த 5-ந் தேதி எரிந்த நிலையில் பெண் பிணமாக கிடந்தார். விசாரணையில் அவர்சோழம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மனைவி வெண்ணிலா (வயது 38) என்று தெரியவந்தது.  அவரை கொலை செய்த நபரை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் உத்தரவிட்டார். அதன்பேரில், திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜி மேற்பார்வையில், சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் விநாயகம், சப்-இன்ஸ்பெக்டர்கள் திருமால், சிவச்சந்திரன், அன்பழகன் மற்றும் போலீசாரை கொண்ட 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

வாகன சோதனை

தனிப்படை போலீசார் நேற்று மூரார்பாளையம் பரமநந்தம் கூட்டு ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கள்ளக்குறிச்சியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரித்தனர்.  விசாரணையில் அவர் சோழம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முனியப்பிள்ளை மகன் ரஜினிகாந்த்(32) என்பதும், திருமணம் ஆகாத இவர் வெண்ணிலாவை எரித்து கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டார். இதுபற்றி அவர் போலீசாருக்கு அளித்த வாக்குமூலம் வருமாறு:-

பணம் கேட்டு தொந்தரவு

வெண்ணிலாவிடம் எனக்கு சொந்தமான நிலத்தை ரூ.4 லட்சத்திற்கு அடமானம் வைத்து பணம் வாங்கினேன். பின்னர், அந்த பணத்தை திரும்ப கேட்டு தொந்தரவு செய்த வெண்ணிலா எனது பணத்தை தந்துவிட்டு, கல்யாணம் செய்துவிட்டு போ, இல்லை என்றால் ஊரில் சொல்லி அசிங்கப்படுத்திவிடுவேன் என்று அடிக்கடி மிரட்டி வந்தார். 

இதை அடுத்து கடந்த 4-ந் தேதி இரவு வெண்ணிலாவை மோட்டார் சைக்கிளில் காட்டுப்பிள்ளையார் கோவில் முள்தோப்புக்கு அழைத்து வந்து அவருக்கு மது ஊற்றி கொடுத்தேன். போதை ஏறியதும் நான் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் அவரது தலையில் ஓங்கி அடித்தேன். இதில் மயங்கி விழுந்த வெண்ணிலா அணிந்திருந்த நகைகளை பறித்துக்கொண்டேன். பின்னர் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக அவரது உடலில் பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டேன். 
இவ்வாறு அவர் கூறினார். 

கைது

இதையடுத்து ரஜினிகாந்த்தை கைது செய்த போலீசார் வெண்ணிலாவிடம் இருந்து பறிமுதல் செய்த 6½ பவுன் நகை, வெள்ளி கொலுசு, கொலை செய்ய பயன்படுத்திய இரும்பு கம்பி, மோட்டார் சைக்கிள் ஆகியற்றையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்