தர்மபுரியில் வருகிற 13-ந் தேதி ஜல்லிக்கட்டு

தர்மபுரியில் வருகிற 13-ந்தேதி ஜல்லிக்கட்டு நடக்கிறது. இதில் பங்கேற்க மாடுபிடி வீரர்கள் இன்று பதிவு செய்யலாம்.

Update: 2021-02-09 17:34 GMT
தர்மபுரி,


தர்மபுரியில் சோகத்தூர் டி.என்.சி.மைதானத்தில் வருகிற 13-ந் தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகா தலைமை தாங்கி பேசியதாவது:-
தர்மபுரியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் இன்று (புதன்கிழமை) ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் பதிவு செய்து கொள்ள வேண்டும். போட்டியில் பங்கேற்கும் காளைகளை நாளை (வியாழக்கிழமை) பதிவு செய்ய வேண்டும். காளைகள், மாடுபிடி வீரர்கள், உரிமையாளர்கள், உதவியாளர்களுக்கு மருத்துவ தகுதி பரிசோதனை நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதில் தகுதி பெறுவோருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படும்.

வழிகாட்டு விதிமுறைகள்

ஜல்லிக்கட்டு போட்டிகான முன்னேற்பாடுகளை சம்பந்தப்பட்ட துறைகளை சேர்ந்தவர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்.உணவு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை செய்ய வேண்டும். போட்டியில் பங்கேற்பவர்கள், பார்வையாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், ஜல்லிக்கட்டு பேரவையினர் என அனைவரும் முககவசம் அணிவதையும், சமூக இடைவெளியை கடை பிடிப்பதையும் உறுதி செய்ய வேண்டும். அரசின் நிலையான வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டை சிறப்பாக நடத்த முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வெற்றிவேல், உதவி கலெக்டர் பிரதாப், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் இளங்கோவன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெமினி, நகராட்சி ஆணையர் சுரேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் வடிவேலன் உள்பட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்