விழுப்புரம் அருகே தீவிபத்து 10 கூரை வீடுகள் எரிந்து சாம்பல்
விழுப்புரம் அருகே தீவிபத்து 10 கூரை வீடுகள் எரிந்து சாம்பல்
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே உள்ள தும்பூர்தாங்கல் கிராமத்தில் 10-க்கும் மேற்பட்ட கூரை வீடுகளில் பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் தினந்தோறும் காலை கரும்பு வெட்டும் பணிக்கு சென்றுவிட்டு, மாலையில் வீடு திரும்புவார்கள். அந்த வகையில் இன்று காலை 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிப்பவர்கள் கரும்பு வெட்டும் பணிக்கு சென்றனர். பிற்பகல் 12 மணியளவில் சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான கூரை வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. அப்போது அங்கு காற்று பலமாக வீசியதால் தீ அருகில் இருந்த செங்கேணி உள்ளிட்ட 9 பேரின் கூரை வீடுகளிலும் பரவி மளமளவென எரியத் தொடங்கியது. இதனால் அப்பகுதியில் பெரும் புகை மூட்டம் ஏற்பட்டது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதோடு, இதுபற்றி விழுப்புரம் தீயணைப்பு நிலையத்துக்கும், கெடார் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.
பொருட்கள் சேதம்
அதன்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் 10 வீடுகளில் இருந்த வீட்டு உபயோக பொருட்கள், 25 பவுன் நகைகள், முக்கிய ஆவணங்கள் என மொத்தம் ரூ.30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. அதில் செங்கேணி என்பவர் தனது மகளின் திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த 8 பவுன் நகையும் தீயில் எரிந்து சாம்பலானது.
இதற்கிடையே தீவிபத்து பற்றி தகவல் அறிந்து வந்த சுப்பிரமணி, செங்கேணி உள்ளிட்ட 10 பேரின் குடும்பங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தங்களது வீடுகள் எரிந்து கிடப்பதை பார்த்து கதறி அழுதனர்.
கோட்டாட்சியர் ஆறுதல்
மேலும் இந்த தீவிபத்து பற்றி தகவல் அறிந்த விழுப்புரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீவிபத்தில் வீடுகளை இழந்த குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களை அங்குள்ள அரசு பள்ளியில் தங்க வைத்ததோடு, 3 வேளை உணவு வழங்குமாறு வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சுப்பிரமணி என்பவர் வீட்டில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.