விழுப்புரம் மாவட்ட அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டம் 776 மாற்றுத்திறனாளிகள் கைது

விழுப்புரம் மாவட்ட அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டம் 776 மாற்றுத்திறனாளிகள் கைது

Update: 2021-02-09 17:31 GMT
விழுப்புரம், 

3 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பிப்ரவரி 9-ந்தேதி தமிழகம் முழுவதும் உ்ள்ள அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் அறிவித்திருந்தது. 
அதன்படி நேற்று விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் மாநிலக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தலைமையில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதோடு, அங்கு குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

விழுப்புரத்தில் 228 பேர் கைது

போராட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட துணை தலைவர்கள் கண்ணப்பன், ஜெயக்குமார் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் தெலுங்கானா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையாக 3 ஆயிரம் ரூபாய் வழங்குவது போல் தமிழகத்திலும் மாற்றுதிறனாளிகளுக்கு 3 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், தனியார் துறை வேலைவாய்ப்பில் 5 சதவீத  இடம் வழங்க தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 228 பேரை கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.  

6 இடங்களில்...

இதேபோல் விக்கிரவாண்டி அரசு அலுவலகத்தில் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 145 பேரும்,  கண்டாச்சிபுரத்தில் முருகன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 57 பேரும், திண்டிவனத்தில் பாவடைராஜன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 118 பேரும், மேல்மலையனூரில் குமார் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 58 பேரும், திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் முருகன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 170 பேரும் கைது செய்யபட்டு மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.விழுப்புரம் மாவட்டம் முழுவதும் 6 இடங்களில் நடந்த குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 776 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

உள்ளிருப்பு போராட்டம்

இந்த நிலையில் 3 அம்ச கோரிக்கை குறித்து நேற்று மாலை சென்னையில் நடந்த மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை தீர்வு எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. இதற்கிடையே விழுப்புரம் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டு திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளிகளை மாலை 6 மணியளவில் போலீசார் விடுதலை செய்தனர். ஆனால் மாற்றுத்திறனாளிகள் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரையில் மண்பங்களை விட்டு வெளியே செல்ல மாட்டோம் என கூறி தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்