சமையல்காரர் அடித்துக்கொலை

திருமருகல் அருகே முன்விரோதத்தில் சமையல்காரரை அடித்துக்கொலை செய்த அண்ணன்-தம்பியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-02-09 17:23 GMT
திட்டச்சேரி:
திருமருகல் அருகே முன்விரோதத்தில் சமையல்காரரை அடித்துக்கொலை செய்த அண்ணன்-தம்பியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
முன்விரோதம் 
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கங்களாஞ்சேரி தட்டாணி தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது60). சமையல்காரர். இவருக்கு சந்திரா(50) மற்றும் விஜயா(45) என்ற 2 மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவியான சந்திரா ரெயிலடி காலனி தெருவிலும், 2-வது மனைவியான விஜயா கங்களாஞ்சேரி தட்டாணி தெருவிலும் வசித்து வந்தனர். சந்திராவுக்கு 3 மகன்களும், விஜயாவுக்கு 1 மகனும் உள்ளனர்.
விஜயா வீட்டின் பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் அழகர்(45). சுமைதூக்கும் தொழிலாளி. இவருக்கும், தியாகராஜனுக்கும் வீட்டை சுற்றி  வேலி அமைப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
அடித்துக்கொலை 
இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி இரவு அழகருக்கும், தியாகராஜனுக்கும் வேலி அமைப்பது தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த அழகரின் தம்பி செல்வகுமார்(40) தனது அண்ணனுக்கு ஆதரவாக பேசி உள்ளார். இதை தொடர்ந்து அழகரும், செல்வகுமாரும் சேர்ந்து அருகில் கிடந்த மண்வெட்டி கட்டையை எடுத்து தியாகராஜனை சரமாரியாக தாக்கினர். இதை பார்த்து அங்கு வந்த அவரது மனைவி விஜயாவையும் அவர்கள் தாக்கினர்.
இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தியாகராஜனை அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
அண்ணன்-தம்பிக்கு வலைவீச்சு 
இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கண்ணபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகர் மற்றும் அவரது தம்பி செல்வகுமார் ஆகிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்