திருச்செந்தூரில் தி.மு.க.வினரின் சாலைமறியல் போராட்டம் வாபஸ் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தகவல்
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் மாசித்திருவிழா தேரோட்டம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கோவில் செயல் அலுவலர் உறுதியளித்ததால் தி.மு.க. சார்பில் நடக்க இருந்த சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் மாசித்திருவிழா தேரோட்டம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கோவில் செயல் அலுவலர் உறுதியளித்ததால் தி.மு.க. சார்பில் நடக்க இருந்த சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
மாசித்திருவிழா தேரோட்டம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாலும், ரதவீதிகளில் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருவதாலும் திருவிழாவில் வழக்கம் போல் நடைபெறும் சுவாமி திருவீதி உலா மற்றும் தேரோட்டம் நடத்துவது கேள்விக்குறியாக இருந்தது.
இதையடுத்து திருச்செந்தூர் அனைத்து சமுதாய மக்கள் கூட்டமைப்பினர் திருவிழா காலங்களில் சுவாமி வீதியுலா, தேரோட்டம் நடக்க வேண்டும். மேலும் தேரோட்டம் நடத்த தடையாக உள்ள ரதவீதி சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5-ந் தேதி போராட்டம் நடத்தினர். பின்னர், நேற்று முன்தினம் திருச்செந்தூர் எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனிடம் அனைத்து சமுதாய மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் நேரில் சென்று தேரோட்டம் நடத்த நடவடிக்கை எடுக்க கோரினர். இதனையடுத்து எம்.எல்.ஏ., கோவில் செயல் அலுவலர் விஷ்ணு சந்திரனை நேரில் சந்தித்து தேரோட்டம் நடத்த வலியுறுத்தினார். செயல் அலுவலர் ரதவீதி சாலை பணிகளை ஆய்வு செய்து, தேரோட்டம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
அப்போது, தி.மு.க. மாணவரணி துணை செயலாளர் உமரி சங்கர், கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் சந்தனராஜ், சண்முகவேல்் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சாலை அமைக்கும் பணி ஆய்வு
பின்னர், எம்.எல்.ஏ. தெற்கு ரத வீதியில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்தார். மேலும், திருச்செந்தூர் நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி (பொறுப்பு) கணேசன் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் சாலையை தரமானதாக விரைந்து முடித்து தேரோட்டம் நடைபெற வழி செய்ய அறிவுறுத்தினார்.
சாலை மறியல் வாபஸ்
பின்னர் எம்.எல்.ஏ. கூறியதாவது, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தேரோட்டத்தை நடத்த கோரி தி.மு.க. சார்பில் நேற்று (9-ந் தேதி) சாலை மறியல் நடைபெற இருந்தது. அனைத்து சமுதாய மக்களின் கூட்டமைப்பினரின் கோரிக்கையின் பேரில், கோவில் செயல் அலுவலரை சந்தித்தோம். அவர் தேரோட்டம் நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மேலும் திருச்செந்தூர் நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரியையும் சந்தித்து தெற்கு ரதவீதி சாலை அமைக்கும் பணியை விரைவாக முடிக்க அறிவுறுத்தியுள்ளேன். அதிகாரிகள் சாலை பணியை நிறைவு செய்து தேரோட்டம் நடைபெற உறுதியளித்ததால், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தி.மு.க. சார்பில் நேற்று நடக்க இருந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது என கூறினார்.