அம்மிக்கல்லை தலையில் போட்டு அரசு பஸ் கண்டக்டர் படுகொலை

வீரபாண்டி அருகே அம்மிக்கல்லை தலையில் போட்டு அரசு பஸ் கண்டக்டர் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது மனைவி, கள்ளக்காதலன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-02-09 16:47 GMT
உப்புக்கோட்டை:
வீரபாண்டி அருகே அம்மிக்கல்லை தலையில் போட்டு அரசு பஸ் கண்டக்டர் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது மனைவி, கள்ளக்காதலன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.  
கண்டக்டர்
தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள கோட்டூர் அரசமரத்தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன் (வயது 44). இவர் உசிலம்பட்டி அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு மணிமேகலை (40) என்ற மனைவியும், விஜய்மூர்த்தி (14), காமேஸ்வரன் (9) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். 
மணிமேகலைக்கும், அதே பகுதியை சேர்ந்த மலைச்சாமி (43) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. 
படுகொலை
இந்தநிலையில் மனைவியின் கள்ளக்காதல் குறித்து அறிந்த ராஜேஷ்கண்ணன், மணிமேகலையையும், மலைச்சாமியையும் கண்டித்தார். ஆனாலும் அவர்கள் தங்களது கள்ளக்காதலை கைவிடவில்லை. இதனால் ராஜேஷ்கண்ணனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக ராஜேஷ்கண்ணனை கொலை செய்ய மலைச்சாமி திட்டமிட்டார். இதற்கு மணிமேகலையும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. 
அதன்படி, நேற்று முன்தினம் இரவு ராஜேஷ்கண்ணன் தனது வீட்டின் அருகில் உள்ள மாட்டு கொட்டகையில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது மணிமேகலை கொடுத்த தகவலின்பேரில் அங்கு வந்த மலைச்சாமி, அம்மிக்கல்லை தூக்கி ராஜேஷ் கண்ணன் தலையில் போட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் அபயகுரல் எழுப்பினார். உடனடியாக மலைச்சாமி அங்கிருந்து தப்பியோடிவிட்டார். மணிமேகலையும் எதுவும் தெரியாதது போன்று வீட்டுக்கு சென்றுவிட்டார். 
மனைவி, கள்ளக்காதலன் கைது
இதற்கிடையே ராஜேஷ்கண்ணனின் அலறல் சத்தம் கேட்டு அவரது தம்பி கதிரவன் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது ரத்த வெள்ளத்தில் ராஜேஷ்கண்ணன் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். 
இதுகுறித்து கதிரவன் கொடுத்த புகாரின் பேரில் வீரபாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரலிங்கம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அப்பகுதியில் பதுங்கியிருந்த மலைச்சாமியை போலீசார் கைது செய்தனர். 
மேலும் கொலைக்கு உடந்தையாக இருந்த மணிமேகலையும் கைது செய்யப்பட்டார். கைதான 2 பேரும் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ராஜேஷ்கண்ணனை தீர்த்துக்கட்டியதாக தெரிவித்தனர். 
இந்த சம்பவம் வீரபாண்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்