மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்
திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியேறும் போராட்டம்
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் இன்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட பொருளாளர் பி.சத்யா தலைமை தாங்கினார். மாவட்டக் குழு உறுப்பினர்கள் பாவடைராயன், சாரவள்ளி, முகமதுபாருக், ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாலுகா தலைவர் சக்திவேல் வரவேற்றார். இதில் 200-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு பாய், போர்வை போன்றவற்றுடன் வந்து கலெக்டர் அலுவலகத்திற்குள் உள்ளே செல்ல நுைழவு முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
5 சதவீத வேலைவாய்ப்பு
பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகை ரூ.3 ஆயிரம் வழங்கப்படுவது போன்று தமிழகத்திலும் குறைந்தபட்சம் 40 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.3 ஆயிரமும், கடும் ஊனமுற்றோரான 70 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரமும் தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும்.
தனியார் துறைப் பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு குறைந்த பட்சம் 5 சதவீதம் வேலை வாய்ப்பு இடங்களை உத்தரவாதப்படுத்தி தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கலைந்து செல்ல போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அவர்கள் கலைந்து செல்லாததால், அவர்களை போலீசார் கைது செய்து திருவண்ணாமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதில் 150 பெண்கள் உள்பட 205 பேர் கைது செய்யப்பட்டனர்.