லாரி உரிமையாளர்கள் போராட்டம்
டீசல் விலை உயர்வை கண்டித்து சிவகங்கை மாவட்டத்தில் போர்வெல் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள்.
சிவகங்கை,
இந்த நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் போர்வெல் லாரி உரிமையாளர்கள் தங்கள் லாரிகளை நிறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று முதல் தொடங்கினார்கள். இது தொடர்பாக சிவகங்கை மாவட்ட போர்வெல் லாரி உரிமையாளர் சங்க பொறுப்பாளர்கள் ரெத்தினராஜா, சக்திவேல், மற்றும் மூர்த்தி ஆகியோர் கூறியதாவது:-
போர்வெல் போடும் ஒரு லாரியில் டிரைவர் மற்றும் 10 தொழிலாளர்கள் வரை பணியில் இருப்பார்கள். இவர்களுக்கு சம்பளம் மற்றும் ஆழ்துளை கிணறு அமைக்கும் போது பதிக்கப்படும் குழாய் மற்றும் டீசல் ஆகியவற்றை லாரி உரிமையாளர்கள் தான் தருகின்றனர். பொதுவாக ஒரு அடி போர் போட தற்போது ரூ.70 வசூலிக்கப்படுகிறது.
எங்களை பொறுத்தவரை அரசு டீசலுக்கு ஜி.எஸ்.டி.வரி தனியாக வசூலிக்கக்கூடாது. மேலும் தினசரி டீசல் விலையை உயர்த்தாமல் 6 மாதத்தி்ற்கு ஒருமுறை விலை நிர்ணயம் செய்ய வேண்டும். போர்வெல் லாரி உரிமையாளர்களுக்கு டீசல் மானியம் வழங்க வேண்டும். இல்லையென்றால் போர் போட வழங்கும் தொகையை ஒரு அடிக்கு ரூ.90 முதல் ரூ.100 வரை வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இந்த தொடர் போராட்டத்தில் சிவகங்கை மாவட்டம் மற்றும் மேலூர் பகுதியை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் கலந்து கொண்டு உள்ளனர். அவர்கள் தங்கள் லாரிகளை சிவகங்கையை அடுத்த மலம்பட்டி அருகே நிறுத்தி வைத்துள்ளனர்.