பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரின் உரிமை கூட்டமைப்பினர் உண்ணாவிரதம் - கோவையில் நடந்தது
இடஒதுக்கீட்டு உரிமையை பறிக்க கூடாது என்று வலியுறுத்தி பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரின் உரிமை கூட்டமைப்பினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
கோவை,
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரின் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில், கோவை டாடாபாத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களின் அமைப்புகளை சேர்ந்த திரளானவர்கள் கலந்துகொண்டனர்.
உண்ணாவிரத போராட்டத்தை கூட்டமைப்பு மாநில தலைவர் ரத்தினசபாபதி தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசும் போது கூறியதாவது:- தமிழ்நாடு முழுவதும் 137 பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களை சேர்ந்த 4 கோடி மக்கள் உள்ளனர்.
உயர்கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் அரசியலைமப்பு கொடுத்த உரிமைகளை கடந்த 30 ஆண்டுகளாக அரசியல்வாதிகள் நம்மிடம் இருந்து பறித்து வருகிறார்கள்.
1989-ம் ஆண்டுவரை பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட 50 சதவீத இடஒதுக்கீடு, இப்போது 26.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு என்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 15 சதவீதம் மட்டுமே வழங்கப்படுகிறது.
நமது இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய பல்லாயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள், அரசு பணிகள் கண்எதிரே பறிபோய்க் கொண்டு இருக்கிறது. கோவையில் தொடங்கி உள்ள இந்த உண்ணாவிரத போராட்டம் மூலம், பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு உரிமைக்கான போராட்டம் மாநிலம் முழுவதும் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் துணை தலைவர் வெள்ளியங்கிரி, கோவை நாடார் சங்க தலைவர் சூலூர் சந்திரசேகரன், கொங்கு வேளாளர் கவுண்டர்கள் சங்க மாநில தலைவர் தேவராஜ், செங்குந்த முதலியார் மகாஜன சங்க மாவட்ட தலைவர் அசோக், நாயுடு சமுதாயத்தை சேர்ந்த குணசேகரன்,
கொங்கு செட்டியார் மாநில தலைவர் தமிழ்செல்வன்,
முக்குலத்தோர் கூட்டமைப்பை சேர்ந்த சுந்தரம், ஒக்கலிக கவுடர் சங்க மாவட்ட தலைவர் தம்புகவுடர், யாதவர் சமுதாயத்தை சேர்ந்த கந்தையா, ரெட்டியார் நலச்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஜனகராஜன், கவரநாயுடு சங்க மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ணராஜ் உள்பட பலரும் கலந்துகொண்டு இடஒதுக்கீடு உரிமை குறித்து பேசினார்கள்.