ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க உதவுவது போல் நடித்து பெண்ணிடம் ரூ.78 ஆயிரம் திருட்டு

ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க உதவுவது போல் நடித்து பெண்ணின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.78 ஆயிரம் திருடப்பட்டது. இது தொடர்பாக வாலிபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-02-09 04:16 GMT
திருமங்கலம்,

ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க உதவுவது போல் நடித்து பெண்ணின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.78 ஆயிரம் திருடப்பட்டது. இது தொடர்பாக வாலிபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பால்பாண்டி மனைவி அன்னபுஷ்பம் (வயது 40). இவர் கடந்த மாதம் 7-ந்தேதி திருமங்கலம்- விருதுநகர் ரோட்டில் உள்ள ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுக்கச் சென்றார். அப்போது 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் பணம் எடுக்க உதவுவதாக கூறியுள்ளார். இதை நம்பி அன்னபுஷ்பம்  ஏ.டி.எம். கார்டை அந்த நபரிடம் கொடுத்தார். அவர் அந்த ஏ.டி.எம். கார்டு மூலம் 20 ஆயிரத்தை எடுத்து கொடுத்துவிட்டு ஏ.டி.எம் கார்டை மாற்றி கொடுத்துவிட்டு சென்றார். 

கடந்த வாரம் அன்னபுஷ்பம் பணம் எடுக்கச் சென்றபோது, ஏ.டி.எம் கார்டு மாறி இருப்பது தெரிந்தது. உடனே வங்கியை அவர் தொடர்பு கொண்டபோது அவரது கணக்கில் இருந்து 78 ஆயிரம் எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அன்னபுஷ்பம் திருமங்கலம் தாலுகா போலீசில் புகார் அளித்தார்.

இதேபோல் கடந்த 2 தினங்களுக்கு முன்பு கள்ளிக்குடி போலீஸ்காரர் செல்லப்பாண்டி (40) ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சென்றபோது 40 வயது மதிக்கத்தக்க ஒருவர், பணம் எடுக்க உதவி செய்வதுபோல் நடித்து கார்டை மாற்றி கொடுத்துவிட்டு சென்றார். பின்னர் கார்டு மாறியிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து உடனே வங்கியை தொடர்பு கொண்டு கார்டை செயல்இழக்க செய்துவிட்டார். 

அவர் இது குறித்து திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார். ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் மோசடி நபரை திருமங்கலம் போலீசார் தேடி வந்தனர். 

இந்த நிலையில் இது தொடர்பாக போலீசார் போடி அருகே உள்ள ஜக்கமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த தம்பிராஜ் (44) என்பவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்