காரியசித்தி ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்
காரியசித்தி ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்
சமயபுரம்
திருச்சியிலிருந்து துறையூர் செல்லும் சாலையில் கரட்டாம்பட்டியில் காரிய சித்தி ஆஞ்சநேயர் கோவில் அறங்காவலர்கள் மற்றும் ஆன்மிக பக்தர்கள், பொதுமக்களால் புதிதாக காரிய சித்தி விநாயகர், காரியசித்தி முருகன், காரியசித்தி ஆஞ்சநேயர் ஆகிய சுவாமிகளுக்கு கோவில் கட்டப்பட்டு உள்ளது.
திருப்பணி வேலைகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, லட்சுமி பூஜை, புண்ணியாக வாசனம், வாஸ்து சாந்தி, கலசபூஜை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து நேற்று காலை 6 மணிக்கு கலச பூஜைகள், திரவியங்கள், ஹோமங்கள், பூர்ணாகுதி ஆகியவை நடைபெற்றன. பின்னர், விநாயகர், முருகன், நாகதேவதை, நவகிரகம், ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் கேரளா, நாமக்கல், திருச்சி, உப்பிலியபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமிகளை தரிசனம் செய்தனர். விழாவையொட்டி, அன்னதானம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவரும், கோட்டை அல்ட்ராபிளஸ் சிமெண்ட் கம்பெனியின் உரிமையாளருமான தாமோதரன், செயலாளர் டாக்டர் விவேகானந்தன் லாவண்யா, பொருளாளர் சுரேஷ், அறங்காவலர் ரவி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.