கருப்பூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த கட்டிட தொழிலாளி பலி
கருப்பூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த கட்டிட தொழிலாளி பலியானார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தொழிலாளி
சேலம் கருப்பூர் அருகே உள்ள தட்டாஞ்சாவடி காளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 29). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சுமதி (26). இவர்களுக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது மனைவியிடம் காட்டுப்பக்கம் செல்வதாக கூறி தனது மோட்டார்சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார். புதூர் அருகே உள்ள கிணற்றின் அருகில் மோட்டார்சைக்கிளையும், செருப்பையும் வைத்துவிட்டு மது அருந்தியதாக கூறப்படுகிறது.
கிணற்றில் பலி
இதில் போதை தலைக்கேறியதால் கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பலியானார். நள்ளிரவு என்பதால் யாருக்கும் தெரியவில்லை. இதை அறியாத சுமதி கணவரை அக்கம்பக்கத்தில் தேடியுள்ளார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் நேற்று காலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கிணற்றின் அருகில் மோட்டார்சைக்கிள் நிற்பதை கண்டு கருப்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கருப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசீலன், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது கிணற்றில் சரவணன் பிணமாக மிதந்துள்ளார். அவரது உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.