வண்டலூர் தாலுகா ரேஷன்கடைகளில் குறைந்த நபர்களுக்கு மட்டுமே விலையில்லா வேட்டி, சேலை வழங்கப்பட்டுள்ளது - பொதுமக்கள் குற்றச்சாட்டு
வண்டலூர் தாலுகாவில் உள்ள ரேஷன்கடைகளில் குறைந்த நபர்களுக்கு மட்டுமே விலையில்லா வேட்டி, சேலை வழங்கப்பட்டுள்ளது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.;
வண்டலூர்,
தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசின் சார்பில் பொங்கல் பரிசு தொகை ரூ.2 ஆயிரத்து 500 மற்றும் பொங்கல் பொருட்கள் அடங்கிய தொகுப்பு, விலையில்லா வேட்டி, சேலை ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.
இதனையடுத்து வண்டலூர் தாலுகாவில் உள்ள பல்வேறு கிராமங்களில் உள்ள ரேஷன் கடைகளில் ரேஷன்கார்டு வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி மாதம் 25-ந் தேதி வரை பொங்கல் பரிசு தொகை மற்றும் பொங்கல் தொகுப்பு முழுமையாக வழங்கப்பட்டன.
பொங்கல் பண்டிகைக்காக வழங்கப்பட வேண்டிய விலையில்லா வேட்டி, சேலை மட்டும் ஒரு சில ரேஷன் கடைகளில் குறைந்த நபர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. விலையில்லா வேட்டி, சேலை வாங்குவதற்கு தகுதியுள்ள பெரும்பாலான ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் முடிந்து இத்தனை நாட்கள் ஆகியும் இன்னும் வழங்கப்படவில்லை, இந்த நிலையில் பிப்ரவரி மாதத்தில் பொருட்கள் வாங்க சென்ற பொதுமக்கள் இன்னும் எங்களுக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்கப்பட்டவில்லை என்று ரேஷன் கடைக்கார்களிடம் கேட்டுள்ளனர். அதற்கு ஊழியர்கள் கடைகளுக்கு முழுமையாக வேட்டி, சேலைகள் வரவில்லை. வந்தவுடன் தரப்படும் என்று அலட்சியமாக பதில் கூறுகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்:-
குறைந்த நபர்களுக்கு மட்டுமே விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டுள்ளது. முழுமையாக வழங்குவதற்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.