அனைத்து வகுப்புகளும் தொடங்கியது; கல்லூரிக்கு உற்சாகமாக வந்த மாணவ-மாணவிகள்

9-ம் வகுப்பு, பிளஸ்-1 மற்றும் அனைத்து கல்லூரி வகுப்புகளும் தொடங்கப்பட்டது. மாணவ-மாணவிகள் உற்சாகமாக வகுப்புகளுக்கு வந்தனர்.

Update: 2021-02-08 19:08 GMT
நெல்லை:
9-ம் வகுப்பு, பிளஸ்-1 மற்றும் அனைத்து கல்லூரி வகுப்புகளும்  தொடங்கப்பட்டது. மாணவ-மாணவிகள் உற்சாகமாக வகுப்புகளுக்கு வந்தனர்.

கொரோனா பரவல்

கொரோனா வைரஸ் பரவியதையொட்டி கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் இறுதி வாரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன.

இந்த நிலையில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து விட்டதால், ஊரடங்கும் தளர்த்தப்பட்டு உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை இறுதி ஆண்டு வகுப்புகள் மட்டும் தொடங்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் பள்ளிகளில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 வகுப்புகள் மட்டும் தொடங்கப்பட்டன.

கல்லூரிகள் திறப்பு

இந்த நிலையில் கல்லூரிகளில் அனைத்து வகுப்புகளையும் பிப்ரவரி 8-ந்தேதி முதல் திறக்கலாம் என தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்திருந்தது. இதையொட்டி நேற்று கல்லூரிகளில் அனைத்து வகுப்புகளும் திறக்கப்பட்டது. அதாவது இளநிலை பாடப்பிரிவுகளில் முதலாம் ஆண்டு மற்றும் 2-வது ஆண்டு வகுப்புகள், முதுநிலை பாடப்பிரிவுகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று திறக்கப்பட்டன.

உற்சாகமாக வந்தனர்

நீண்ட இடைவெளிக்கு பிறகு கல்லூரி வகுப்புகள் திறக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் உற்சாகமாக, மகிழ்ச்சியுடன் கல்லூரிக்கு வந்தனர். முதலாம் ஆண்டு புதிய மாணவர்களும் ஆர்வத்துடன் வந்தனர். கல்லூரி நுழைவு வாசலில் மாணவர்களின் உடல்வெப்ப நிலை தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் கைகளில் கிருமி நாசினி திரவம் தெளிக்கப்பட்டு வகுப்புகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் முதல் நாள் வகுப்புகளில் மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்தல் தொடர்பாக ஆலோசனைகள் வழங்கினர். கலை பாடப்பிரிவுகளில் 2-வது மற்றும் 4-வது பருவத்தேர்வுக்கான பாடம் நடத்த தொடங்கினர்.

அறிவியல் பாடப்பிரிவுகளில் சமீபத்தில் ஆன்லைன் மூலம் எழுத்து தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது. அவர்களுக்கான செய்முறை தேர்வு நேற்று நடத்தப்பட்டது. இதையடுத்து அடுத்த பருவத்துக்கு உரிய பாடங்களை நடத்த இருப்பதாக ஆசிரியர்கள் கூறினர். இதையடுத்து கல்லூரிகளில் முழுமையாக செயல்படத்தொடங்கியது. வழக்கமாக ஏப்ரல் மாதம் முடிவடையும் பருவத்தேர்வு, நடப்பாண்டில் மே, ஜூன் மாதம் வரை நடைபெற வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பள்ளிகளில்...

இதே போல் பள்ளிகளில் ஏற்கனவே 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 வகுப்புகள் திறந்து பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முதல் 9-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-1 வகுப்புகளும் திறக்கப்பட்டது. அவர்களுக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து, கை கழுவச் செய்த பிறகே வகுப்புகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் ஆசிரியர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துக்கூறி, பாடம் நடத்தும் பணியை தொடங்கினர்.

ஒரு சில பள்ளிகளில் விடுதியில் மாணவ-மாணவிகள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பெரும்பாலான பள்ளிகளில் 1 வாரம் கழித்து விடுதிகளை திறக்க இருப்பதாக பள்ளிக்கூட நிர்வாகங்கள் தெரிவித்து உள்ளன.

ஆசிரியை, மாணவிகள் கருத்து

நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியை மலர்விழி கூறியதாவது:-

அனேக நாட்களுக்கு பிறகு பிளஸ்-1 மாணவிகளுக்கு பள்ளி திறக்கப்பட்டு உள்ளது. மாணவிகளை மீண்டும் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களது பள்ளியில் 717 மாணவிகள் பிளஸ்-1 படிக்கின்றனர். கொரோனா பரவாமல் தடுக்க சமூக இடைவெளி விடுவதற்காக ஒரு வகுப்பில் 25 மாணவிகள் வீதம் மட்டும், அதாவது ஒரு பெஞ்சில் 2 மாணவிகள் மட்டுமே அமர வைக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம் அதிக வகுப்பறைகளில் அதிக ஆசிரியைகள் பாடம் நடத்தி வருகிறோம்.

மாணவிகளுக்கு முதல் நாளில் கொரோனா காலத்தில் எப்படி நடக்க வேண்டும்? என்றும் முக கவசம் அணிதல், அடிக்கடி கை கழுவுதல் குறித்து அறிவுரைகளை வழங்கி உள்ளோம். இனிமேல் பாடங்களை படித்து தேர்வு எழுத முடியுமா? என்ற பயத்தை நீக்கும் வகையில் பாடத்திட்டம் குறைப்பு குறித்தும் பேசி நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

பிளஸ்-1 மாணவி ஆனந்த செல்வி கூறுகையில், ‘‘நீண்ட நாட்கள் கழித்து பள்ளிக்கு வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. முக கவசம் அணிதல், சமூக இடைவெளி விதிமுறைகளை கடைபிடிக்க ஆலோசனைகள் கூறி உள்ளனர். மேலும் நன்றாக படிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரவாமல் தொடர்ந்து பள்ளி செயல்பட்டால் நன்றாக இருக்கும்’’ என்றார்.

பிளஸ்-1 மாணவி ஜாக்லின் கூறுகையில், ‘‘கொரோனா முடிந்து பள்ளிக்கு மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆசிரியைகள் வழிகாட்டுதலுடன் நல்ல முறையில் படித்து தேர்வு எழுத உள்ளோம். தேர்வு குறித்த அச்சம் இல்லை’’ என்றார்.

இதேபோல் தென்காசி மாவட்டத்திலும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. பள்ளிக்கூடங்களில் 9, 11-ம் வகுப்புகளும் தொடங்கப்பட்டன.

மேலும் செய்திகள்