தலைஞாயிறு ஒன்றியக்குழு கூட்டத்தில் துணை தலைவர் தர்ணா
தனது பகுதி பிரச்சினை குறித்து நீண்ட நேரம் பேசுவதற்கு அனுமதி தராததை கண்டித்து தலைஞாயிறு ஒன்றியக்குழு கூட்டத்தில் துணை தலைவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு, வெளிநடப்பு செய்தார்.
வாய்மேடு:
தனது பகுதி பிரச்சினை குறித்து நீண்ட நேரம் பேசுவதற்கு அனுமதி தராததை கண்டித்து தலைஞாயிறு ஒன்றியக்குழு கூட்டத்தில் துணை தலைவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு, வெளிநடப்பு செய்தார்.
ஒன்றியக்குழு கூட்டத்தில் தர்ணா
நாகை மாவட்டம் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வராஜ், மலர்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதை தொடர்ந்து கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-
ஜெகதீஸ் (ஒன்றியக்குழு துணை தலைவர்):- ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள், பயனாளிகள், ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்காக குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். அனைத்து ஒன்றியக்குழு உறுப்பினர்களின் பெயர்கள் மற்றும் செல்போன் நம்பரை எழுதி பெயர் பலகை வைக்க வேண்டும்.
குடியரசு தின விழாவிற்கு முறையான அழைப்பு தரவில்லை என்று கூறியும், தனது பகுதி பிரச்சினை குறித்து நீண்ட நேரம் பேசுவதற்கு அனுமதி தராததை கண்டித்தும் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
ரேஷன் அரிசியில் புழுக்கள்
உதயகுமார் (தி.மு.க.):- சாகுபடிக்காக அனைத்து தேசிய வங்கிகளிலும் வாங்கப்பட்ட கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
கஸ்தூரி (அ.தி.மு.க):-வானவன் மகாதேவி, கவுண்டர் காடு செல்லும் மயான சாலையை தார் சாலையாக மாற்றி தர வேண்டும். வெள்ளப்பள்ளம் கடைத்தெருவில் புதிய பஸ் நிலையம் அமைத்து தர வேண்டும்.
மகேந்திரன் (இந்திய கம்யூனிஸ்டு):-தலைஞாயிறு ஒன்றியத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்படும் அரிசியில் புழுக்கள் காணப்படுகிறது. என்று கூறி ஒரு பானையில் கொண்டு வந்த ரேஷன் அரிசியை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஒன்றியகுழுத் தலைவரிடம் காண்பித்தார்.
தமிழரசி (ஒன்றியக்குழு தலைவர்):- உறுப்பினர் அனைவரின் கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது. முடிவில் அலுவலக மேலாளர் பக்கிரிசாமி நன்றி கூறினார்.