கள்ளக்குறிச்சியில் சாலை மறியல்

கள்ளக்குறிச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 32 பேரை போலீசார் கைது செய்தனர்;

Update: 2021-02-08 17:34 GMT
கள்ளக்குறிச்சி

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் கள்ளக்குறிச்சி மாவட்டம் சார்பில் 7-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி 21 மாத நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 6 நாட்களாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். தொடர்ந்து நேற்று 7-வது நாளாக போராட்டம் நீடித்தது.

இதில் கலந்துகொண்ட அரசு ஊழியர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். சிலர் சாலையில் படுத்து போராட்டம் செய்தனர். இதற்கு மாவட்ட செயலாளர் மகாலிங்கம், பொருளாளர் பி.ரவி, அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் வீரபத்திரன், இணை செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு சாலைப் பணியாளர்கள் சங்க மாநில துணைத்தலைவர் முத்து, நெடுஞ்சாலைத் துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் என்.ரவி, கிராம சுகாதார செவிலியர் மாநில துணை தலைவர் விஜயராணி உள்பட 32 பேரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் தலைமையிலான போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து பின்னர் மாலையில் விடுவித்தனர்.

மேலும் செய்திகள்