வங்கி பெண் மேலாளரிடம் நகை பறித்த வாலிபருக்கு 3 ஆண்டு சிறை
வங்கி பெண் மேலாளரிடம் நகை பறித்த வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கம்பம்:
உத்தமபாளையத்தை சேர்ந்த வங்கி பெண் மேலாளர் வனிதா. இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20-ந்தேதி கம்பத்தில், காமயகவுண்டன்பட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர், வனிதா அணிந்திருந்த 10 பவுன் நகையை பறித்து சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில் கம்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், நகையை பறித்த வாலிபர் கம்பம் ஆர்.ஆர் நகரை சேர்ந்த விவேக் (வயது 30) என்பதும், அவர் மீது பல்வேறு திருட்டு, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து விவேக்கை குண்டர் சட்டத்தில் கைது செய்து, மதுரை மத்திய சிறைச்சாலையில் போலீசார் அடைத்தனர். இதற்கிடையே அவர் மீதான நகை பறிப்பு வழக்கு உத்தமபாளையம் குற்றவியல் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி அருண்குமார், குற்றம்சாட்டப்பட்ட விவேக்குக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.