தேனி மாவட்டத்தில் 10 மாதங்களுக்கு பிறகு கல்லூரிகள் திறப்பு

தேனி மாவட்டத்தில் 10 மாதங்களுக்கு பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்டன. பள்ளிகளில் 9 மற்றும் 11-ம் வகுப்புகளும் தொடங்கின.

Update: 2021-02-08 17:09 GMT
தேனி:
தேனி மாவட்டத்தில் 10 மாதங்களுக்கு பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்டன. பள்ளிகளில் 9 மற்றும் 11-ம் வகுப்புகளும் தொடங்கின.
பள்ளி, கல்லூரிகள் திறப்பு
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. அதன்பிறகு கொரோனா பரவல் அதிகரித்ததால் பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறக்க முடியாத சூழல் உருவானது. பின்னர் பல்வேறு கட்ட ஆய்வுகளை தொடர்ந்து முதுகலை மற்றும் இளங்கலை இறுதியாண்டு மாணவ-மாணவிகளுக்காக மட்டும் கடந்த டிசம்பர் மாதம் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டன. பெற்றோரிடம் கடந்த கருத்துக்கேட்பு கூட்டங்களை தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்காக பள்ளிகள் கடந்த ஜனவரி 19-ந்தேதி திறக்கப்பட்டன.
இதற்கிடையே கொரோனா வைரஸ் பரவல் தற்போது குறைந்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரி வகுப்புகளை முழுமையாக தொடங்கவும், பள்ளிகளில் 9-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-1 மாணவ, மாணவிகளுக்கும் வகுப்புகளை தொடங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் 10 மாதங்களுக்கு பிறகு கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன. அதேபோல் பள்ளிகளில் 9-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-1 வகுப்புகளும் தொடங்கப்பட்டன.
முக கவசம்
தேனி மாவட்டத்தை பொறுத்தவரை 71 உயர்நிலைப்பள்ளிகள், 147 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 218 பள்ளிகள் உள்ளன. நேற்று இந்த பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டன. இதையடுத்து மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். இதேபோல் வீரபாண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, போடி அரசு பொறியியல் கல்லூரி உள்பட மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளும் நேற்று திறக்கப்பட்டன. அங்கும் உற்சாகத்துடன் மாணவ-மாணவிகள் வந்தனர். முக கவசம் அணிந்து அவர்கள் வந்தனர். முக கவசம் அணியாதவர்களுக்கு பள்ளி, கல்லூரி வளாகங்களில் முக கவசம் வழங்கப்பட்டது.
மேலும் பள்ளி, கல்லூரி வளாகங்களில் தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் மாணவ, மாணவிகளில் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. அதன்பிறகே அவர்கள் வகுப்பறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். வகுப்பறையில் மாணவர்கள் சமூக இடைவெளியுடன் அமர்ந்தனர். தேனி, வீரபாண்டி, கோட்டூர் உள்பட பல்வேறு பகுதிகளிலும் அரசு பள்ளிகளில் வாசலில் நின்று மாணவ-மாணவிகளை ஆசிரியர்கள் வரவேற்றனர். இதுதவிர பள்ளி, கல்லூரிகளில் கொரோனா தடுப்பு முன்னேற்பாடு நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளதா? அரசு விதித்த கட்டுப்பாடுகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மேலும் செய்திகள்