நடுக்கடலில் உருவான மணல் திட்டை காண சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
ஏர்வாடி அருகே நடுக்கடலில் உருவான மணல் திட்டை காண சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
கீழக்கரை
ஏர்வாடி அருகே நடுக்கடலில் உருவான மணல் திட்டை காண சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
மணல் திட்டு
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா பகுதியான ஏர்வாடி பிச்சை மூப்பன் வலசை கடல் நடுவில் மணல் திட்டு உருவானதை தொடர்ந்து அங்கு மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளை சார்பில் படகு சவாரி தொடங்கப்பட்டது. இதைதொடர்ந்து தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து மணல் திட்டை காண்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
மேலும் தமிழகத்தில் முதன்முறையாக கடலில் செல்லக்கூடிய கண்ணாடி வசதியுடன் கூடிய படகுகள் உள்ளதால், அதன்மூலம் கடல் அடியில் உள்ள அரியவகை உயிரினங்களான கடல் பாசி, சிற்பி, கடல் புற்கள், பவள பாறைகளான, மூளை, விரல்கள், மேக வடிவு, மான்கொம்பு போன்ற பாறைகள் மற்றும் டால்பின், கடல் ஆமைகள், கடல் பல்லி, கடல் குதிரைகள், கடல் விசிறி, மேல் தாமரை மற்றும் அரிய வகை உயிரினங்களை படகில் இருந்தபடியே காண முடிகிறது.
கடற்கரையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் படகுப்பயணம் மேற்கொண்டால் இந்த மணல் திட்டை அடைய முடியும். ஆனால் படகு சவாரி செய்ய 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இல்லை. ஒரு படகில் 12 பேர் பயணம் செய்ய முடியும். சென்று வர ஒரு நபருக்கு ரூ.200 வசூலிக்கப்படுகிறது.
பவளப்பாறைகள்
இந்த பகுதியில் உள்ள பவளப்பாறைகள் கடல் சீற்றம், புயல் ஏற்படும் காலகட்டங்களில் அலைகள் வேகத்தை கட்டுப்படுத்தும் தன்மை உடையவை. கடல் தட்ப, வெப்பநிலையை சமநிலைப்படுத்தும் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும். இந்த பவளப்பாறை வருடத்திற்கு 2 சென்டிமீட்டர் அளவு மட்டுமே வளரும். இதுபோன்ற பாறைகள் உலகிலேயே சில நாடுகளில் மட்டுமே உள்ளன. அதில் தமிழகத்தில் உள்ள மன்னார் வளைகுடா பகுதிகளில் அதிக வளர்ச்சி காணப்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
தற்போது ஏர்வாடி அருகே கடல் பகுதிகளில் தொடங்கி இருக்கும் படகு சவாரியால் இப்பகுதியில் சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலா வளர்ச்சி அடையும் என்று உயிர்க்கோள காப்பக துணை மண்டல அலுவலர் கனகராஜ் கூறினார்.