செய்துங்கநல்லூர் அருகே வயலில் தலைக்குப்புற கவிழ்ந்த கார் 6 பேர் உயிர் தப்பினர்
செய்துங்கநல்லூர் அருகே வயலில் தலைக்குப்புற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஸ்ரீவைகுண்டம்:
செய்துங்கநல்லூர் அருகே வயலில் தலைக்குப்புற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கார் கவிழ்ந்து விபத்து
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்த சேகு முகம்மது இஸ்மாயில் மகன் அப்துல்காதர் (வயது 22). இவர் சென்னையில் வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காயல்பட்டினத்திற்கு வந்தார். பின்னர் அங்கு இருந்து காரில் சென்னைக்கு புறப்பட்டார். அப்துல்காதருடன் அவரது நண்பர்கள் ஜாகிர், சிவா, கார்த்திக், சதீஷ், ஹாஜி ஆகியோரும் சென்றனர்.
செய்துங்கநல்லூர் அருகில் உள்ள தூது குழி சாலை வளைவு பகுதியில் வரும்போது கார் டயர் திடீரென பஞ்சர் ஆனது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை அருகில் உள்ள வயல் பகுதியில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
6 பேர் தப்பினர்
விபத்தில் காரில் வந்த 6 பேரும் அதிர்ஷ்டவசமாக எந்த ஒரு காயம் ஏற்படாமல் உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த செய்துங்கநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசுந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
பின்னர் கார் வயலில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.