பலத்த காற்று எச்சரிக்கை: தூத்துக்குடியில் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை

கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் தூத்துக்குடியில் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை.

Update: 2021-02-08 16:28 GMT
தூத்துக்குடி:
கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் தூத்துக்குடியில் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை.
பலத்த காற்று எச்சரிக்கை
மன்னார்வளைகுடா மற்றும் கன்னியாகுமரி கடல் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) வரை வடகிழக்கு திசையில் இருந்து 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.  
இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி இயக்குனர் விஜயராகவன்  அனைத்து  மீனவ  கூட்டுறவு சங்கம் மற்றும் மீனவ கிராம நிர்வாகிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். 
அதில், மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த காற்று வீசுவதால், மீனவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) வரை யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது.  
வானிலை எச்சரிக்கையை மீறி கடலுக்கு மீன்பிடி தொழிலுக்கு செல்லும் மீன்பிடி படகுகளில் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
விசைப்படகுகள்
மேலும் மீனவர்கள் தங்களது படகுகளையும், மீன்பிடி உபகரணங்களையும் பாதுகாப்பாக கரையில் வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 
இந்த வானிலை எச்சரிக்கையை மீனவ கிராம ஆலயங்களில் அறிவிக்கவும், மீன்பிடி இறங்குதளம், மீன் ஏலக்கூடம் அறிவிப்பு பலகை ஆகியவற்றில் அறிவிப்பு செய்ய வேண்டும் என்று தெரிவித்து உள்ளார். 
இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள சுமார் 245 விசைப்படகுகளும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. அந்த படகுகள் அனைத்து மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

மேலும் செய்திகள்