ஹெத்தையம்மன் கோவில் பிரச்சினையை தீர்க்கக்கோரி18 கிராமங்களில் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம்

ஹெத்தையம்மன் கோவில் பிரச்சினையை தீர்க்கக்கோரி 18 கிராமங்களில் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடந்தது.

Update: 2021-02-08 16:24 GMT
இளித்தொரை கிராமத்தில் கறுப்பு கொடி போராட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.
கோத்தகிரி

ஹெத்தையம்மன் கோவில் பிரச்சினையை தீர்க்கக்கோரி 18 கிராமங்களில் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடந்தது. 

ஹெத்தையம்மன் கோவில் பிரச்சினை 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பெத்தளா கிராமத்தில் கைகாரு சீமைக்கு உட்பட்ட 18 கிராமங்களுக்கு சொந்தமான ஹெத்தையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடத்துவது மற்றும் பூசாரிகளை நியமிப்பது தொடர்பாக கைகாரு சீமை மக்களுக்கும், பூசாரி தரப்பினருக்கும் இடையே தொடர்ந்து பிரச்சினை நிலவி வருகிறது.

இந்த நிலையில் திருவிழா நடைபெறும் நேரத்தில் கடந்த நவம்பர் 30-ந் தேதி குன்னூர் சப்-கலெக்டர் ரஞ்சித்சிங், இரு தரப்பினரையும் அழைத்து பேசி, உள்ளூர் பூசாரிகள் தவிர, வெளியூர் பூசாரிகளும், உள்ளூர் மற்றும் வெளியூர் பொதுமக்கள் ஹெத்தையம்மன் கோவிலுக்குள் செல்ல அனுமதி இல்லை என ஆணை பிறப்பித்தார். 

மாவட்ட நிர்வாகம் மீது குற்றச்சாட்டு 

ஆனால் கடந்த டிசம்பர் மாதம் 28-ந் தேதி கைகாரு சீமை மக்களை கலந்து ஆலோசிக்காமல் பூசாரி தரப்புக்கு திருவிழாவை நடத்த சப்-கலெக்டர் அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கைகாரு சீமை தலைவர் நஞ்சா கவுடர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 

இதையடுத்து நவம்பர் 30-ந் தேதி குன்னூர் சப்-கலெக்டர் பிறப்பித்த ஆணையை உறுதி செய்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முன்னிலையில் அந்த ஆணையை செயல்படுத்த வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த நிலையில் ஐகோர்ட்டு தீர்ப்பை மதிக்காமல் மாவட்ட நிர்வாகம் பூசாரி தரப்புக்கு ஒருதலைபட்சமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

போராட்டம் நடத்த தீர்மானம் 

இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 11-ந் தேதி பெட்டட்டி சுங்கம் மைதானத்தில் நடைபெற்ற கைகாரு பஞ்சாயத்தில், மாவட்ட நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் கைகாரு சீமை பஞ்சாயத்து தீர்மானத்திற்கு எதிராக செயல்பட்ட பூசாரிகள் 3 பேரை நீக்கி புதிய பூசாரிகளை தேர்ந்தெடுப்பது.

மாவட்ட நிர்வாகத்தின் ஒருதலைப்பட்ச செயலை கண்டித்து கைகாரு சீமைக்கு உட்பட்ட 18 கிராமங்களில் உள்ள 2,200 வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. 

2,200 வீடுகளில் கறுப்புக்கொடி 

இந்த நிலையில் இளித்தொரை, எடப்பள்ளி, கட்டப்பெட்டு உள்பட கைகாரு சீமைக்குட்பட்ட 18 கிராமங்களில் உள்ள வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடைபெற்றது. மேலும் இளித்தொரை கிராமத்தில் தலைவர் நஞ்சாகவுடர் தலைமையில் பொதுமக்கள் திரண்டு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கறுப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து நஞ்சா கவுடர் கூறும்போது, கைகாரு பஞ்சாயத்து தீர்மானத்தின்படி ஹெத்தையம்மன் கோவிலில் 3 பூசாரிகளை பதவி நீக்கம் செய்து புதிய பூசாரிகளை நியமிக்க வேண்டும். சீமையின் தீர்மானத்தையும் மதிக்காமல் செயல்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்த கட்டமாக 2,200 குடும்பங்கள் தங்களது ரேஷன் கார்டுகளை அரசிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்துவதுடன், சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கவும் முடிவு செய்து உள்ளோம் என்றார். 

மேலும் செய்திகள்