மீனாட்சி அம்மன், கள்ளழகர் கோவில் யானைகள் புத்துணர்வு முகாமுக்கு சென்றன திருப்பி அனுப்பப்பட்ட திருப்பரங்குன்றம் கோவில் யானை

மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், அழகர்கோவில் கள்ளழகர் கோவில் ஆகிய கோவில்களின் யானைகள் மேட்டுப்பாளையம் அருகே நடைபெறும் புத்துணர்வு முகாமுக்கு சென்ற நிலையில் திருப்பரங்குன்றம் கோவில் யானை திருப்பி அனுப்பப்பட்டது.

Update: 2021-02-08 06:34 GMT
அழகர்கோவில்,

மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், அழகர்கோவில் கள்ளழகர் கோவில் ஆகிய கோவில்களின் யானைகள் மேட்டுப்பாளையம் அருகே நடைபெறும் புத்துணர்வு முகாமுக்கு சென்ற நிலையில் திருப்பரங்குன்றம் கோவில் யானை திருப்பி அனுப்பப்பட்டது.

சிறப்பு நலவாழ்வு முகாம்

தமிழக அரசின் சார்பில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் இன்று தொடங்குகிறது.

இதில் கோவில் யானைகள் தவிர, தனியார் யானைகளும் கலந்து கொள்கின்றன. இதையொட்டி அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான சுந்தரவல்லி யானை நேற்று காலையில் புத்துணர்வு முகாமிற்கு புறப்பட்டுச் சென்றது.

கோவிலின் மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்கக் கொடிமரம் முன்பு பட்டர்களின் வேத மந்திரங்கள் ஒலிக்க தும்பிக்கையை உயர்த்தி, யானை சுவாமியை வணங்கி காலை 6.25 மணிக்கு புறப்பட்டு வெளியேறி வந்தது. அங்கு தயார் நிலையில் திருக்கல்யாண மண்டபம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த லாரியில் யானை ஏறியது.

உற்சாகமாக சென்றது

அதன் பின்னர் பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோவில் முன்பு விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து லாரியின் முன்பு திருஷ்டி தேங்காய்கள் உடைக்கப்பட்டு கற்பூர தீபாராதனைகள் நடந்தன. கோவில் யானை ராஜகோபுரத்தை பார்த்தபடி மறுபடியும் தும்பிக்கையை உயர்த்தி காண்பித்து உற்சாகமாக முகாமிற்கு புறப்பட்டு சென்றது. அப்போது கோவில் நிர்வாகத்தினர் பணியாளர்கள், பக்தர்கள் வணங்கி அனுப்பி வைத்தனர்.
 யானையுடன் கோவில் அலுவலர்கள், பாகன்கள் உள்பட 10 பேர் வரை சென்றனர். அத்துடன் யானைக்கு தேவையான நாணல் புல், கரும்பு, தண்ணீர் உள்ளிட்ட உணவுகளும் அனுப்பி வைக்கப்பட்டன. 
இந்த யானை இன்று முதல் 48 நாட்கள் முகாமில் தங்கி இருந்து பின்னர் கோவிலுக்கு திரும்பி வரும். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.

மீனாட்சி அம்மன் கோவில் யானை

ஏற்கனவே திருப்பரங்குன்றம் முருகன் கோவில் யானை தெய்வானை பாகனை தாக்கி கொன்றது. இதனால் திருச்சி மாவட்டத்தில் உள்ள வன விலங்குகள் பாதுகாப்பு முகாமுக்கு அந்த யானை அழைத்து செல்லப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அந்த யானை சமீபத்தில் திருப்பரங்குன்றம் திரும்பி வந்தது. இதனை தொடர்ந்து அந்த யானை தனித்து விடப்படாமல் மீனாட்சி அம்மன் கோவில் யானையுடன் சேர்ந்து பழகுவதற்கு விடப்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலை அந்த 2 யானைகளும் தனித்தனி லாரிகளில் ஏற்றப்பட்டு புத்துணர்வு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டன. இதனிடையே திருப்பரங்குன்றம் யானை தெய்வானை மேட்டுப்பாளையம் புத்துணர்வு மையத்துக்கு வருவது சம்பந்தமாக அங்குள்ள பதிவேட்டில் குறிப்பிடப்படவில்லை என கூறப்படுகிறது.

திருப்பி அனுப்பப்பட்டது அங்கு உள்ள பதிவேட்டில் அந்த யானையின் பெயர் விவரம் இல்லை. இதனால் முகாமில் அந்த யானையை அனுமதிக்காமல், திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. முறைப்படி, உரிய தகவல்கள் அனுப்பப்பட்டு, ஓரிரு நாட்களில் மீண்டும் யானை புத்துணர்வு முகாமுக்கு கொண்டு செல்லப்படும் என தெரிகிறது.

மேலும் செய்திகள்