விருதுநகருக்குள் நெடுந்தூர பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை
மாவட்ட தலைநகரான விருதுநகருக்குள் நெடுந்தூர பஸ்கள் வந்து செல்ல மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்,
விருது நகரின் மையப்பகுதியில் பழைய பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. விருதுநகர் - சாத்தூர் ரேட்டில் பெருந்தலைவர் காமராஜர் பெயரில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. ஆனாலும் அந்த பஸ் நிலையம் அமைக்கப்பட்டதில் இருந்து முழுமையாக செயல்படாத நிலையில் இருக்கிறது.
இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டு வழங்கியுள்ள வழிகாட்டலின் படி அனைத்து பஸ்களும் புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு பழைய பஸ் நிலையம் வழியாகவோ அல்லது அதற்கு வாய்ப்பில்லாத நிலையில் பழைய பஸ் நிலையத்திற்கு அருகில் வந்து செல்ல வேண்டும் என கூறியுள்ளது.
பாதிப்பு
ஆனாலும் இந்த வழிகாட்டல் முறையாக கடைப்பிடிக்கப்படவில்லை. இதனால் நெடுந்தூரபஸ்கள் விருதுநகருக்குள் வராமல் புறக்கணிக்கும் நிலை தொடர்கிறது. இதனால் நகர் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அதிலும் குறிப்பாக இரவு நேரங்களில் நகரின் வெளியே பயணிகள் இறக்கி விடப்படுவதால் பெரும் சிரமத்துக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது.
அதிலும் போக்குவரத்து கழக பணிமனை முன்பு பஸ் நிறுத்தம் இருந்தபோதிலும் பல பஸ்கள் அங்கு நிறுத்தப்படுவதில்லை.
கலெக்டர் ஆபீஸ்
மதுரை அல்லது நெல்லையில் இருந்து விருதுநகருக்கான டிக்கெட் கேட்டால் கலெக்டர் ஆபீஸ் மட்டும் தான் நிற்கும். ஆனால் கடைசியாக ஏருங்கள் என்றோ அல்லது போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு இறங்கி கொள்ளுங்கள்.
ஆனால் திருமங்கலம் டிக்கெட் எடுக்க வேண்டும் என்று பஸ் கண்டக்டர்கள் கூறும் நிலை உள்ளது. மொத்தத்தில் இந்த பஸ்களில் பயணிகள் படும் சிரமம் அளவற்றது.
எனவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் வட்டார போக்குவரத்து துறையினருடன் கலந்தாய்வு செய்து அனைத்து நெடுந்தூரபஸ்களும் விருதுநகருக்குள் வந்து செல்லும் வகையில் உரிய நடவடிக்கை எடுப்பதோடு மதுரை ஐகோர்ட்டு வழிகாட்டலையும் பின்பற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரப்பட்டுள்ளது.