தங்க சங்கிலிக்காக, பெண் குளத்தில் தள்ளி கொலை செய்யப்பட்டார்
திருவட்டார் அருகே தங்க சங்கிலிக்காக பெண் குளத்தில் தள்ளி கொலை செய்யப்பட்டார்.
திருவட்டார்,
திருவட்டார் அருகே தங்க சங்கிலிக்காக, பெண் குளத்தில் தள்ளி கொலை செய்யப்பட்டார். இதையொட்டி முன்னாள் ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.
இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
தங்க சங்கிலி பறிக்க முயற்சி
குமரி மாவட்டம் திருவட்டார் அருகே மேக்காமண்டபம் புனத்துவிளையை சேர்ந்தவர் வின்சென்ட். இவர் கேரளாவில் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி மேரி ஜெயா அமுதா (வயது 45).
இவர் நேற்று மதியம் 2 மணி அளவில் முளகுமூடு பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தார். அப்போது ஒருவர் மோட்டார் சைக்கிளில் எதிரே வந்துகொண்டு இருந்தார். மேரி ஜெயா அமுதாவின் அருகில் வந்த போது, அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி, மேரி ஜெயா அமுதாவின் கழுத்தில் அணிந்து இருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றார்.
கொலை
இதனால் மேரி ஜெயா அமுதா கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடி வந்தனர். இதனால் அவர், மேரி ஜெயா அமுதாவை அருகில் உள்ள குளத்தில் தள்ளினார். இதனால் தண்ணீரில் மூழ்கி மேரிஜெயா அமுதா பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும், தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன், திருவட்டார் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் தக்கலை சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
கைது
மேரி ஜெயா அமுதாவிடம் தங்க சங்கிலியை பறிக்க முயன்றவரை போலீசாரும், பொதுமக்களும் தேடினார்கள். அப்போது அவர் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள வீட்டில் பதுங்கி இருந்தார்.
அவரை பொதுமக்கள் பிடித்து அடித்து உதைத்தனர். அவர்களிடம் இருந்து அவரை போலீசார் மீட்டு விசாரித்தனர். அப்போது அவர் வெட்டுக்காட்டு விளையை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மெர்லின் ராஜ் (35) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
பொது மக்கள் அடித்ததில் மெர்லின்ராஜ் படுகாயம் அடைந்து இருந்ததால், அவரை தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
கொலை செய்யப்பட்ட மேரி ஜெயா அமுதாவின் உடலை குலசேகரம் தீயணைப்பு வீரர்கள் குளத்தில் இருந்து மீட்டனர். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த பயங்கர சம்பவம் குறித்து திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட மேரி ஜெயா அமுதாவுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.