குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.9 ஆயிரமாக நிர்ணயிக்க கோரிக்கை
குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.9 ஆயிரமாக நிர்ணயிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர் கூட்டமைப்பினர் சார்பில் தேசிய பென்சனர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு உடையார்பாளையம் வட்ட தலைவர் சுந்தரேசன் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் சிவசிதம்பரம், தா.பழூர் வட்ட தலைவர் காந்தி, ஆண்டிமடம் வட்டச்செயலாளர் பூவராகமூர்த்தி ஆகியோர் பேசினர். வட்ட செயலாளர் கலியமூர்த்தி அறிக்கை வாசித்தார். அரியலூர் மாவட்ட கருவூல அலுவலர் நடராசன் விழாவை தொடங்கி வைத்தார். பேராசிரியர் சிவபெருமான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். ஜெயங்கொண்டம் உதவி கருவூல அலுவலர் சுரேஷ் உள்ளிட்டோர் முதியவர்களை பாராட்டி, வாழ்த்தி பேசினர். விழாவில், ஜெயங்கொண்டம் நகராட்சியில் கழிவுநீரை கால்வாய் மூலம் நீர்நிலைகளில் நிரப்புவதை நிறுத்த வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் தமிழை கட்டாய பாடமாக ஆக்க வேண்டும். சிதம்பரத்தில் இருந்து அரியலூருக்கும், கும்பகோணத்தில் இருந்து விருத்தாசலத்திற்கும் ரெயில் பாதை அமைக்க வேண்டும். மத்திய அரசை போல் மருத்துவப்படியை ஆயிரம் ரூபாயாக வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.9 ஆயிரம் என நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக பொருளாளர் ராமமூர்த்தி வரவேற்றார். முடிவில் திட்டத் துணை செயலாளர் ராமசாமி நன்றி கூறினார்.