புழுதிவாக்கத்தில் குளத்தில் மூழ்கி அண்ணன்-தம்பி பலி

புழுதிவாக்கத்தில் குளத்தில் குளித்தபோது நீரில் மூழ்கி அண்ணன்-தம்பி இருவரும் பலியானார்கள்.

Update: 2021-02-08 04:51 GMT
ஆலந்தூர், 

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் காந்திநகர் ஏரிக்கரை தெருவைச் சேர்ந்தவர் ராஜன். பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இவருடைய மகன்கள் வினோத்குமார் (வயது 14), விஷால் (12).

ஆதம்பாக்கத்தில் உள்ள ஒரு பள்ளியில் வினோத்குமார் 9-ம் வகுப்பும், விஷால் 7-ம் வகுப்பும் படித்து வந்தனர். அண்ணன்- தம்பி 2 பேரும் நேற்று தங்கள் நண்பர்களுடன் புழுதிவாக்கம் அன்னை தெரசா நகர் 14-வது தெருவில் உள்ள மாநகராட்சி குளத்தில் குளித்துக்கொண்டு இருந்தனர்.

குளத்தில் மூழ்கி பலி

அப்போது விஷால் திடீரென நீரில் மூழ்கினார். இதை கண்ட வினோத்குமார், தம்பியை காப்பாற்ற முயன்றார். அப்போது அவரும் குளத்தில் மூழ்கினார். அண்ணன்-தம்பி இருவரும் குளத்தில் மூழ்கி பலியானதை கண்டு அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள் பயத்தில் அங்கிருந்து ஓடிவிட்டனர்.

இது குறித்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின்பேரில் மடிப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று குளத்தில் மூழ்கி பலியான இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி மடிப்பாக் கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நேரத்தில் தங்களது 2 மகன்களையும் பறி கொடுத்த ராஜன், அவருடைய மனைவி இருவரும் மகன்களின் உடல்களை பார்த்து கதறி அழுத காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்