வெளிநாட்டுக்கு ஏற்றுமதி இல்லாததால் அதிராம்பட்டினம் பகுதியில் ‘பிளவர் இறால்’ விலை கடும் வீழ்ச்சி

வெளிநாட்டுக்கு ஏற்றுமதி இல்லாததால் அதிராம்பட்டினம் பகுதியில் ‘பிளவர் இறால்’ விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.;

Update: 2021-02-08 01:24 GMT
அதிராம்பட்டினம்,

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடல்பகுதியில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதால் கடலில் மீன் இனப்பெருக்கத்துக்கு காரணமாக உள்ள கடல் தாவரங்கள், பவளப்பாறைகள் பாதிக்கப்படுகின்றன.
மீன் குஞ்சுகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் மீன்வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக இந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் மட்டுமல்லாமல் கடல் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுவருபவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. 

5 வகை இறால்கள்

தஞ்சை மாவட்ட கடல் பகுதியில் அலையாத்திக்காடுகள் உள்ளதால் இறால் மற்றும் நண்டுகள் அதிகமாக இருக்கும். இதில் இறால்களில் ஒயிட் இறால், டைகர் இறால், கருப்பு இறால், பிளவர் இறால், தாழை இறால் என 5 வகை இறால்களும் அதிகம் கிடைக்கும். 
மேலும் இங்குள்ள இறால்கள் உணவுக்கு ஏற்றவகையில் நல்ல ருசியாக இருக்கும் என்பதால் இப்பகுதியில் கிடைக்கும் இறால் மீன்களுக்கு அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் அதிக அளவில் தேவைகள் இருந்து வருகிறது. 

ஏற்றுமதி இல்லை

தஞ்சை மாவட்ட கடல் பகுதியில் இறால் ஏற்றுமதியாளர்கள் முகாமிட்டு அதிக அளவில் ஏற்றுமதி செய்துவந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே கடல் பகுதியில் இறால்களின் வரத்து அதிகமாக இருந்தாலும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி இல்லாததால் இறால் மீன்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதுபற்றி மீனவர்கள் கூறுகையில், ‘இறால் வகைகளில் ஒயிட் இறால் எனப்படும் வெள்ளை இறாலை தான் வியாபாரிகள் முதல் ரகமாக கருதுவார்கள். இந்த வகையை சேர்ந்த ஒரு இறால் குறைந்தது 30 கிராமிலிருந்து 50 கிராம் வரை இருக்கும். இவை முன்பு கிலோ ஒன்றுக்கு ரூ.550 வரை விலை போகும். 

விலை குறைவு

மற்ற இறால்களுக்கு வெள்ளை இறாலை விட குறைவாகவே விலை கிடைக்கும். தற்போது வெள்ளை இறால்கள் வரத்தே இல்லாததால் வெள்ளை இறால்களுக்கு அடுத்த ரகமாக இருக்கும் பிளவர் இறால்கள் கிலோ ஒன்றுக்கு ரூ. 600 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி இல்லாததால் தற்போது ரூ.350 மட்டுமே விலை கிடைக்கிறது’ என்றனர். 

மேலும் செய்திகள்