திருப்புவனத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு
திருப்புவனத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது.
திருப்புவனம்,
திருப்புவனத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஒவ்வொரு வருடமும் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெறும். நேற்று நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சிவகங்கை மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநில தொண்டரணி தலைவர் அயோத்தி முன்னிலை வகித்தார். போட்டியில் 14 மாடுகளும், 126 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்யப்பட்டிருந்தனர். மாடுபிடி வீரர்களுக்கும், மாடுகளுக்கும் தனித்தனியாக பரிசோதனை செய்யப்பட்டது.
போட்டியில் கலந்து கொண்ட அனைத்து காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் விழாக்குழு சார்பில் மரியாதை செய்யப்பட்டது. வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் சிறப்பாக விளையாடி பிடிபடாத காளைகளுக்கும், மாடுகளை பிடித்த குழுவினருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில் திருப்புவனம் தாசில்தார் மூர்த்தி, தொழில் அதிபர்கள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மருத்துவ குழுவினர், கால்நடை துறையினர், தீயணைப்புத் துறையினர், மற்றும் பல குழுவினர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.