பெரம்பலூரில் சசிகலாவை வரவேற்று அ.தி.மு.க. நிர்வாகி பெயரில் சுவரொட்டி
பெரம்பலூரில் சசிகலாவை வரவேற்று அ.தி.மு.க. நிர்வாகி பெயரில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.
சசிகலாவை வரவேற்று சுவரொட்டி
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த சசிகலா, கடந்த 27-ந்தேதி விடுதலை செய்யப்பட்டார். பின்னர் அவர் பெங்களூருவில் தங்கி ஓய்வு எடுத்து வந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) தமிழகம் வரவுள்ளார். இந்த நிலையில் அவரை வரவேற்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் சுவரொட்டிகள் ஒட்டி வருகின்றனர். இவ்வாறு சுவரொட்டி ஒட்டிய நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அ.தி.மு.க. வின் பெரம்பலூர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் எம்.என்.ராசாராம் பெயரில் சசிகலாவை வரவேற்று நேற்று பெரம்பலூர் நகர்ப்பகுதியில் பல்வேறு இடங்களில் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. அதில் கழக பொதுச்செயலாளர் என்று சசிகலாவின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி.தினகரன் மற்றும் எம்.என்.ராசாராம் ஆகியோருடைய புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. இதில் ராசாராமின் பெயர் ராஜாராம் என்று இடம்பெற்றிருந்தது. ஆனால் அந்த சுவரொட்டியை அச்சடித்த அச்சகத்தின் பெயர் விவரம், அதில் இல்லை. சசிகலாவை வரவேற்று அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் பெயரில் சுவரொட்டி ஒட்டப்பட்ட சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காழ்ப்புணர்ச்சி
இந்த சம்பவம் குறித்து எம்.என்.ராசாராம் கூறுகையில், பெரம்பலூர் நகர்ப்பகுதியில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவும் இல்லை. என் மீது கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணமாக யாரோ மர்மநபர்கள் எனது பெயரையும், புகைப்படத்தையும், அ.தி.மு.க. கட்சி பதவியையும் பயன்படுத்தி சுவரொட்டி ஒட்டியுள்ளனர். இச்செயலை நான் வன்மையாக கண்டிக்கின்றனே். மேலும் நான் தொடர்ந்து அ.தி.மு.க.விலேயே இருந்து வருகிறேன், என்றார். மேலும் இது தொடர்பாக அவர், கட்சியினருடன் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், எனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்திட தவறான சுவரொட்டி அடித்து ஒட்ட தூண்டியவர்கள், அச்சடித்தவர்கள், ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.
2 கோஷ்டிகளாக...
ஏற்கனவே பெரம்பலூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. வினர் 2 கோஷ்டிகளாக செயல்பட்டு வருவதாகவும், அதில் ஒரு கோஷ்டியில் எம்.என்.ராசாராம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் எதிர்க்கோஷ்டியில் இருப்பவர்கள் இந்த சுவரொட்டியை ஒட்டினார்களா? அல்லது அ.ம.மு.க.வை சேர்ந்தவர்கள் அல்லது வேறு யாரேனும் ஒட்டினார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி, அந்த சுவரொட்டியை ஒட்டியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.