நெடுவாசல் கிராமத்தில் சிவன் கோவில் கட்ட ரூ.31 லட்சம் கோவில் கட்ட நிதி

நெடுவாசல் கிராமத்தில் மொய் விருந்து மூலம் வசூலான ரூ.31 லட்சத்தை சிவன் கோவில் கட்ட ஒரு குடும்பத்தினர் நிதியாக அளித்தனர்.

Update: 2021-02-08 00:44 GMT
கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே உள்ள நெடுவாசல் கிழக்கு கிராமத்தில் கொரோனா ஊரடங்கால் கடந்த ஆண்டு ஆவணி மாதம் நடத்த முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்ட மொய் விருந்து நிகழ்ச்சிகள் நேற்று அங்குள்ள நாடியம்மன் கோவில் திடலில் நடைபெற்றன.

அந்தவகையில் ஒவ்வொரு மொய் விருந்திலும் சுமார் ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை மொய் வசூலானது. வெளிநாட்டில் வேலை செய்து வரும் அதே ஊரைச் சேர்ந்த பாலவேலாயுதம் குடும்பத்தினரும் மொய் விருந்து நடத்தினர். அவர் வெளிநாட்டில் இருப்பதால் மொய் விருந்து நிகழ்ச்சியில் அவரது மனைவி விக்டோரியா மற்றும் அவரது மகன் லிங்கேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு மொய் வசூல் செய்தனர்.

அந்தவகையில் பாலவேலாயுதம் குடும்பத்தினருக்கு ரூ.32 லட்சத்துக்கு மேல் மொய் வசூலானது.  பின்னர், விருந்து செலவு போக மீதமிருந்த ரூ.31 லட்சத்து 64 ஆயிரத்து 171- ஐ பாலவேலாயுதத்தி்ன் தாய் மற்றும் அவரது குடும்பத்தினர் ஒரு வெள்ளை துண்டில் வைத்து கட்டி அந்த பணத்தை சிவன் கோவில் கட்ட திருப்பணிக்குழுவினரிடம் கொடுத்தனர். இதனைக்கண்ட திருப்பணி குழுவினர் நெகிழ்ச்சி அடைந்து பாலவேலாயுதம் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்தனர். 

இதுகுறித்து லிங்கேஸ்வரன் கூறுகையில், நாங்கள் அனைவரும் சிவ பக்தர்கள். பாட்டியும், அப்பாவும் கைலாயம் வரை போய் வந்தவர்கள். எங்கள் ஊரில் சிவாலயம் கட்ட திருப்பணி தொடங்கி 3 ஆண்டாகிறது. 
இதற்கு முன்பாக கோவில் திருப்பணிக்காக ரூ.16 லட்சம் கொடுத்திருக்கிறோம். நெடுவாசலில் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு 1½ ஏக்கர் நிலம் கொடுத்திருந்தோம் என்றார்.

மேலும் செய்திகள்