தாரமங்கலம் அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதல்; நெசவுத்தொழிலாளி பலி
தாரமங்கலம் அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் நெசவுத்தொழிலாளி பலியானார். சிறுவர்கள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-
தாரமங்கலம்,
தாரமங்கலம் அருகே உள்ள ராமிரெட்டிப்பட்டி கிராமம் உத்தண்டிவளவு பகுதியை சேர்ந்தவர் அர்த்தனாரி மகன் மணி (வயது 29). நெசவு தொழிலாளி.
நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் தனது நண்பர் முரளி (26) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் தாரமங்கலம் புறவழிச்சாலையில் உள்ள உணவகத்திற்கு சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது முன்னால் ஒரு மோட்டார் சைக்கிளில் தாரமங்கலம் 6-வது வார்டு பகுதியை சேர்ந்த வரதராஜன் (35) என்பவர் தனது இரண்டு குழந்தைகளுடன் சென்றுகொண்டு இருந்தார்.
எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் அனைவரும் பலத்த காயம் அடைந்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியில் மணி இறந்துவிட்டார்.
படுகாயம் அடைந்த வரதராஜன் மற்றும் குழந்தைகள் அரிகிருஷ்ணன் (7), அரிநாத் (7) ஆகியோர் சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபற்றி முரளி கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.