கொன்னையூரில் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் பயங்கர தீ விபத்து

கொன்னையூரில் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2021-02-08 00:12 GMT
தீ விபத்து
 பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவில் எதிரே கணேசன் மற்றும் சரவணன் ஆகியோர் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் ஒரு கடையில் திடீரென தீப்பிடித்தது. பின்னர் பக்கத்துக்கு கடைக்கும் தீ பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

இதுகுறித்து அப்பகுதியினர், பொன்னமராவதி தீயணைப்பு நிலையத்திற்கும், மின் வாரிய அலுவலகத்திற்கும்  தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், அப்பகுதியில் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து தீயணைப்பு நிலைய அலுவலர் சந்தானம் தலைமையில்  வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

பொருட்கள் எரிந்து நாசம்
 இந்த தீ விபத்தில் 2 கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பூஜை பொருட்கள், டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாயின. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 தீ விபத்து குறித்து தகவல் அறிந்த அ.தி.மு.க. புதுக்கோட்டை மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவருமான வைரமுத்துவின் மகன் குமாரசாமி மற்றும் திருமயம் ரகுபதி எம்.எல்.ஏ. ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட கணேசன் மற்றும் சரவணன் ஆகியோருக்கு நிதி உதவி வழங்கி ஆறுதல் கூறினர்.

மேலும் செய்திகள்