கரூர் அருகே வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி

நொய்யல் மற்றும் வெள்ளியணை பகுதியில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலியாயினர்.

Update: 2021-02-08 00:09 GMT
விபத்து 
கரூர் அருகே வெங்கமேடு என்.எஸ்.கே. நகரை சேர்ந்தவர் குப்புசாமி(வயது 42). லோடுமேன். இவரது மனைவி சந்திரா(40). கூலித்தொழிலாளி. சந்திராவின் தந்தைக்கு புகளூர் பழனிமுத்துநகரில் நினைவஞ்சலி நடைபெறுவதையொட்டி நேற்று முன்தினம் இரவு கணவனும், மனைவியும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் புகளூர் பழனிமுத்து நகருக்கு வந்தனர். இந்நிலையில் நேற்று காலை குப்புசாமி வெங்கமேடு சென்று வருவதாக கூறி தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தார். 

தளவாபாளையம் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே அதிவேகமாக சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறி சாலையின் ஓரத்தில் இருந்த தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் திடீரென குப்புசாமி மோட்டார் சைக்கிளுன் கீழே விழுந்ததில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் ரத்தக்கசிவு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பரபாரதி வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
கொத்தனார் பலி
இதேபோல் கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், காணியாளம்பட்டி அருகே உள்ள காளைய பட்டியை சேர்ந்தவர் நரசிம்மன்(45). கொத்தனார். இவர் சொந்த வேலை காரணமாக நேற்று காணியாளம்பட்டிக்கு சென்றுவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது வீரியபட்டி சமத்துவபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தார். 

இதில் பலத்த காயமடைந்த நரசிம்மன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த மாயனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த நரசிம்மனின் உடலை கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லாலாபேட்டை
திருச்சி மாவட்டம் சிறுக மணியை சேர்ந்தவர் ஹரிஹரன்(21). இவர் கரூரில் இருந்து சிறுகமணி செல்வதற்காக மோட்டார் சைக்கிளை ஓட்டிக்கொண்டு திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது லாலாபேட்டை அருகே மேல சிந்தலவாடி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி நடந்து சென்று கொண்டிருந்த செல்வம் (42) என்பவர் மீது மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த செல்வத்தை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்