சேலம் மாவட்டம், வீரபாண்டி தொகுதி மக்களின் எதிர்பார்ப்பு என்ன?
சேலம் மாவட்டம், வீரபாண்டி தொகுதி மக்களின் எதிர்பார்ப்பு என்னென்ன என்று இந்த பகுதியில் காண்போம்.
தமிழகத்தின் 91-வது சட்டமன்ற தொகுதி வீரபாண்டி. இந்த தொகுதியில் சேலம் ஒன்றியத்தில் 7 ஊராட்சிகள், வீரபாண்டி ஒன்றியத்தில் 25 ஊராட்சிகள், பனமரத்துப்பட்டியில் 20 ஊராட்சிகள் மற்றும் ஆட்டையாம்பட்டி, இளம்பிள்ளை, மல்லூர், பனமரத்துப்பட்டி ஆகிய 4 பேரூராட்சிகள் அடங்கியுள்ளது. இங்கு பெரும்பான்மை சமூகமாக வன்னியர் சமுதாயம் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக கவுண்டர், முதலியார், செட்டியார், போயர், அருந்ததியர் என பரவலாக அனைத்து சமுதாய மக்களும் வசித்து வருகிறார்கள்.
ஜவுளி பூங்கா
வீரபாண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயமும், நெசவு, விசைத்தறி ஆகிய தொழில்கள் பிரதான தொழிலாக உள்ளது. குறிப்பாக இளம்பிள்ளை பகுதியில் நெய்யப்படும் காட்டன் சேலைகள் மற்றும் பட்டு சேலைகளுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் நல்ல மவுசு உண்டு. இளம்பிள்ளை பகுதியில் விசைத்தறி மற்றும் கைத்தறி கூடங்கள் அதிகளவில் உள்ளன. இதனால் இளம்பிள்ளையில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை விசைத்தறி தொழிலாளர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
அதேபோல், ஆட்டையாம்பட்டி முறுக்கு என்றால் மிகவும் சுவையாக இருக்கும் என்பதால் வெளி மாவட்ட மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அந்த பகுதியில் முறுக்கு சுடும் தொழிலில் பல குடும்பங்கள் ஈடுபட்டு வருகிறது. அந்த குடிசை தொழிலை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.
பனமரத்துப்பட்டி ஏரி
அதேசமயம், பனமரத்துப்பட்டி ஏரியை தூர்வாரி சுற்றுலாத்தலமாக்க வேண்டும் என்பது அந்த பகுதி மக்களின் 15 ஆண்டுகளாக கோரிக்கையாகும். அதாவது, 2 ஆயிரத்து 400 ஏக்கரில் இந்த ஏரி அமைந்துள்ளது. போதமலை, ஜருகுமலையில் மழை பெய்தால் அங்கிருந்து வரட்டாறு, கூட்டாறு வழியாக பனமரத்துப்பட்டிக்கு தண்ணீர் வரும். ஆனால் நீர்வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு, வனத்துறையால் ஏற்படுத்தப்பட்ட தடுப்பணைகளால் ஏரிக்கு தண்ணீர் வருவது பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த ஏரியை தூர்வாரி சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும். பனமரத்துப்பட்டி பகுதிகளில் அதிகளவில் பூக்கள் விளைச்சல் இருப்பதால் அங்கு பூக்களை பதப்படுத்தும் குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் என்று விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
14 தேர்தலில்
சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் இதுவரை நடந்த 14 தேர்தலில் அ.தி.மு.க. 7 முறையும், தி.மு.க. 6 முறையும், காங்கிரஸ் ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளது. இதுவரை நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம் வருமாறு:-
1957- எம்.ஆர்.கந்தசாமி முதலியார் (காங்கிரஸ்), 1962- வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் (தி.மு.க.), 1967-வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் (தி.மு.க.), 1971- வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் (தி.மு.க.) 1977- பி.வேங்ககவுண்டர் (அ.தி.மு.க.), 1980-பி.விஜயலட்சுமி (அ.தி.மு.க.), 1984-பி.விஜயலட்சுமி (அ.தி.மு.க.), 1989-பி.வெங்கடாசலம் (தி.மு.க.), 1991- கே.அர்ச்சுணன் (அ.தி.மு.க.), 1996- வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் (தி.மு.க.), 2001- எஸ்.கே.செல்வம்- (அ.தி.மு.க.), 2006- வீரபாண்டி ராஜா (தி.மு.க.), 2011- எஸ்.கே.செல்வம் (அ.தி.மு.க.), 2016-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் பி.மனோன்மணி (அ.தி.மு.க.) 94 ஆயிரத்து 792 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்பார்ப்பு
வீரபாண்டி தொகுதியில் நடைபெற உள்ள தேர்தலில் அ.தி.மு.க.-தி.மு.க. இடையே மீண்டும் போட்டி நிலவும் என கூறப்படுகிறது. ஆனால் அ.தி.மு.க.வில் உள்ள கூட்டணி கட்சிகள் வீரபாண்டி தொகுதியை தங்களுக்கு ஒதுக்குமாறு அ.தி.மு.க. தலைமையை வற்புறுத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது. தி.மு.க.வை பொறுத்தவரையில் மீண்டும் அங்கு தி.மு.க.வேட்பாளர் களம் இறங்குவது உறுதி என்று அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். அ.தி.மு.க., தி.மு.க.வை சேர்ந்த வேட்பாளர்கள் யாராக இருந்தாலும் தொகுதியில் நிலவும் பிரச்சினைகளை கண்டறிந்து அதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வீரபாண்டி தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.