இது விவசாய நிலம் அல்ல...!; திருப்பரங்குன்றத்தில் உள்ள சேமட்டான்குளம்

படத்தை பார்த்ததும் பச்சை பசேல் என்று இருப்பதால் ஏதோ விவசாய நிலம் என்று நினைத்து விடாதீர்கள். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் குளம் தான் இந்த பரிதாபமாக நிலையில் கிடக்கிறது. திருப்பரங்குன்றத்தில் உள்ள சேமட்டான்குளம் தான் இது.;

Update:2021-02-08 04:33 IST
வீட்டுமனைகள்
திருப்பரங்குன்றத்தை பொறுத்தவரை விவசாயிகளின் முதுகெலும்பாக 7 கண்மாய்கள் உள்ளன. அதில் ஒன்றாக சேமட்டான்குளம் அமைந்துள்ளது. இந்த கண்மாய்க்கு நிலையூர் கால்வாய் வழியாக வைகை தண்ணீர் வரும். அதனால் பல ஏக்கரில் விவசாய பயிர்கள் செழித்து வளரும். அதன்மூலம் நூற்றுக்கணக்கான விவசாயிகள் வாழ்வாதாரம் பெற்று வந்தனர்.  இந்த நிலையில் கன மழை பெய்யாததாலும், வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படாத நிலை ஏற்பட்டதாலும் சேமட்டான்குளம் பகுதியில் விவசாயம் கேள்விக்குறியானது. அதனால் விவசாயிகள் தங்களது இல்ல திருமணம் மற்றும் விவசாய கடனை அடைக்கப்பதற்காக நிலங்களை விற்றனர். இதனையடுத்து தற்போது பெரும்பாலான விளைநிலங்கள் வீட்டுமனையாகி குடியிருப்புகளாகி விட்டன. இதனால் சேமட்டான்குளத்திற்கு உரிய ஆயக்கட்டு இல்லாத நிலையாகிவிட்டது 

குடிநீர் ஆதாரம்
இருப்பினும் சேமட்டான்குளத்திற்கு வழக்கம் போல வைகை தண்ணீர் வருகிறது. சமீபத்தில் பெய்த தொடர் மழையாலும், வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதாலும் மற்ற கண்மாய்கள் போல சேமட்டான் குளமும் நிரம்பி மறுகால் போனது. இதில் விவசாயம் செய்ய முடியவில்லை என்றாலும் அங்கு தண்ணீர் நிரம்பி கிடப்பதால் நிலத்தடி நீர் கைகொடுக்கும். இதனால் சேமட்டான்குளத்தை சுற்றி உள்ள ஹார்விப்பட்டி, அமைதி சோலை, எஸ்.ஆர்.வி.நகர், ஏ.ஆர்.வி.நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது. இதனால் அப்பகுதி மக்கள் சேமட்டான்குளத்தில் தண்ணீர் கிடப்பதை பாக்கியமாக கருதுகிறார்கள். இந்த நிலையில் மாநகராட்சி குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சேமட்டான்குளத்தில் கலப்பதால் தெளிந்த நீர் மாசுபடுகிறது. மேலும் அதில் இருந்து தூர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர். 

ஆகாய தாமரை
இந்த நிலையில் சேமட்டான் குளத்தில் ஆயக்கட்டு பாசன வசதி இல்லாததால் அதற்குள்ளேயே தண்ணீர் கிடக்கிறது. அதில் ஆகாய தாமரை வளர்ந்து படர்ந்து உள்ளது. குளத்தை பார்த்தால் ஏதோ விவசாய நிலம் போல தோன்றுகிறது. ஆகாயதாமரை சூழ்ந்து கிடப்பதாலும், கழிவுநீர் கலப்பதாலும் குளத்தில் நிலத்தடி நீர் மாசுபடும் அவலநிலை உள்ளது. எனவே பொதுப்பணிதுறை உயர் அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு குடிநீர் ஆதாரமாக உள்ள சேமட்டான்குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுப்பதோடு ஆகாய தாமரையை அகற்றி அதை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்