நம்பியூர் அருகே பயிர்க்கடனை புதுப்பிக்காததால் கூட்டுறவு வங்கி தலைவர்-அதிகாரி சிறைபிடிப்பு

நம்பியூர் அருகே பயிர்க்கடனை புதுப்பிக்காததால் கூட்டுறவு வங்கி தலைவர்-அதிகாரியை விவசாயிகள் சிைறபிடித்தனர்.

Update: 2021-02-07 21:57 GMT
நம்பியூர்
நம்பியூர் அருகே பயிர்க்கடனை புதுப்பிக்காததால் கூட்டுறவு வங்கி தலைவர்-அதிகாரியை விவசாயிகள் சிைறபிடித்தனர்.
விவசாயிகள் முற்றுகை
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே கொழந்தப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் தங்களது விவசாய நிலங்களுக்கு பயிர்க்கடன் பெறுவதற்காக, வட்டியில்லா நகைக்கடன் பெற்றிருந்தனர்.
இந்த நிலையில் தமிழக அரசு விவசாயிகளுக்கான பயிர்க்கடனை ரத்து செய்ததாக அறிவித்தது. இதனைக் கேள்விப்பட்ட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று முன்தினம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு திரண்டனர். பின்னர் வங்கியை முற்றுகையிட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுபற்றி அறிந்ததும் வங்கி செயலாளர் அங்கு சென்று விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதற்கு விவசாயிகள் கூறும்போது, ‘கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்துடன் பயிர்க்கடன் முதிர்வடைந்த பயனாளிகள் தங்களது கடன்களை செலுத்தி அதன் பிறகு புதுப்பித்துக் கொள்ளலாம் என தெரிவித்தீர்கள்.
அதன்படி நாங்களும் எங்களது வங்கி கடன்களை திருப்பி செலுத்தி விட்டு மீண்டும் புதுப்பித்துக்கொள்ள நிலத்தின் சிட்டா, அடங்கல், கிராம நிர்வாக அலுவலரின் சான்று போன்ற ஆவணங்களை வங்கியில் சமர்ப்பித்தோம்.
அலைக்கழிப்பு
ஆனால் போதிய நிதி இல்லை எனக்கூறி 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மீண்டும் பயிர்க்கடன் கொடுக்க காலதாமதம் செய்து அலைக்கழித்தீர்கள். பயிர்க்கடனை புதுப்பிக்காமல் காலதாமதம் செய்ததால் தான் தற்போது பயிர்க்கடன் தள்ளுபடி பலன் எங்களுக்கு கிடைக்காமல் போய்விட்டது. ஏன் எங்களுக்கு பயிர்க்கடன் உரிய காலத்தில் வழங்கவில்லை?’ என்றனர்.
அதற்கு வங்கி செயலாளர் சரியாக பதில் அளிக்கவில்லை. இதனால் பெண்கள் வங்கியை பூட்ட முயன்றனர். அப்போது அங்கு வந்த வங்கி தலைவர் பெண்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் 2 அதிகாரிகளையும் உள்ளே தள்ளி வங்கியின் ஷட்டரை அடைத்தனர். பின்னர் அவர்கள் வெளியே தரையில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பரபரப்பு
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் நம்பியூர் போலீசார், சத்தியமங்கலம் நகர கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் ஜான்டேவிட் அங்கு சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது மேலாண்மை இயக்குனர் கூறும்போது, ‘உங்களது புகார்களை தெரிவித்து உரிய நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்கிறோம்’ என்றார். அதனை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் ஷட்டரை திறந்து வங்கி உள்ளே அடைத்து வைக்கப்பட்ட 2 அதிகாரிகளையும் விடுவித்தனர். பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்