தனியார் பள்ளிகள் பொதுத்தேர்வு எழுத முழு கட்டணம் செலுத்த சொல்லி கட்டாயப்படுத்தினால் நடவடிக்கை- அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எச்சரிக்கை
பொதுத்தேர்வு எழுத முழு கட்டணத்தை செலுத்த சொல்லி கட்டாயப்படுத்தினால் தனியார் பள்ளிக்கூடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
டி.என்.பாளையம்
பொதுத்தேர்வு எழுத முழு கட்டணத்தை செலுத்த சொல்லி கட்டாயப்படுத்தினால் தனியார் பள்ளிக்கூடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
பள்ளிக்கல்வித்துறை
டி.என்.பாளையத்தில் அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய கட்சி அலுவலகம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.
விழாவில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்டு, அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
முன்னதாக டி.என்.பாளையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்திய அளவில் பள்ளிக்கல்வித்துறை 3-ம் இடத்தில் இருந்து முதல் இடத்துக்கு வந்துள்ளது.
தனியார் பள்ளிக்கூடங்கள்
தனியார் பள்ளிக்கூடங்கள் முழு கட்டணத்தை செலுத்தினால் தான் பொதுத்தேர்வை எழுத அனுமதிப்போம் என்று கட்டாயப்படுத்தினால் அது குறித்து பெற்றோர்கள் அளிக்கும் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
அப்போது அமைச்சருடன் அந்தியூர் தொகுதி இ.எம்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ., மாநில வர்த்தக அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், டி.என்.பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஹரிபாஸ்கர் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
சத்தியமங்கலம்
இதேபோல் சத்தியமங்கலத்தில் நடந்த தனியார் திருமண மண்டப திறப்பு விழாவில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் மற்றும் பவானிசாகர் எஸ்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஏற்கனவே 10 மற்றும் பிளஸ்-2 வகுப்புக்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு பாடம் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) முதல் 9 மற்றும் பிளஸ்-1 வகுப்புகளுக்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகிறது. இதற்காக கூடுதல் வகுப்பறைகள் அமைக்கப்படும்.
பள்ளிக்கூட மாணவர்களுக்கு ஏற்கனவே அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் போக்குவரத்து துறை அமைச்சர் கூடுதல் பஸ்கள் வசதி செய்து கொடுப்பார். மலைக்கிராமங்களில் மாணவர்களுக்கு தேவையான பஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.