7-வது நாளாக போராட்டம்: ஈரோட்டில் பெண் டாக்டர்கள் உண்ணாவிரதம்
ஈரோட்டில் 7-வது நாளாக நேற்று நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் பெண் டாக்டர்கள் பங்கேற்றனர்.
ஈரோடு
ஈரோட்டில் 7-வது நாளாக நேற்று நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் பெண் டாக்டர்கள் பங்கேற்றனர்.
உண்ணாவிரத போராட்டம்
அலோபதி மருத்துவ முறையில் உள்ள 58 வகையான அறுவை சிகிச்சைகளை ஆயுர்வேதா, சித்தா, யுனானி டாக்டர்கள் உரிய பயிற்சி பெற்று மேற்கொள்ளலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மருத்துவ சங்கம் சார்பில் ஈரோட்டில் கடந்த ஒரு வாரமாக உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் தனியார் ஆஸ்பத்திரியின் டாக்டர்கள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தனர்.
இந்தநிலையில் 7-வது நாளாக நேற்று ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா அருகில் பெருந்துறைரோடு பகுதியில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்துக்கு ஈரோடு மகளிர் மகப்பேறு மருத்துவர்கள் சங்க தலைவர் டாக்டர் நான்சிதானு தலைமை தாங்கினார். செயலாளர் டாக்டர் பூர்ணிமா சரவணன், மகளிர் அணி மாநில தலைவர் டாக்டர் சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பெண் டாக்டர்கள்
இந்த போராட்டத்தில் இந்திய மருத்துவ சங்க தேசிய துணைத்தலைவர் சி.என்.ராஜா, மாநில தலைவர் ராமகிருஷ்ணன், மாவட்ட தலைவர் டாக்டர் பிரசாத், டாக்டர் அபுல்ஹாசன் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். இதில் பெண் டாக்டர்கள் பலர் பங்கேற்றனர்.
ஈரோட்டில் கடந்த ஒரு வாரமாக நடந்து வந்த உண்ணாவிரத போராட்டம் நேற்றுடன் நிறைவு பெற்றதாகவும், இதைத்தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் அடுத்தக்கட்ட உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்றும், இதில் ஈரோட்டை சேர்ந்த இந்திய மருத்துவ சங்க நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளதாகவும் சங்கத்தின் தேசிய துணைத்தலைவர் டாக்டர் சி.என்.ராஜா தெரிவித்து உள்ளார்.